×
 

45 சவரன் நகையை ஒப்படைத்த தூய்மை பணியாளர்... சிறப்பு தபால் தலை வெளியிட்டு கௌரவித்த அஞ்சல் துறை..!

45 சவரன் தங்க நகையை ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவிற்கு சிறப்பு தபால்தலை வெளியிட்டு அஞ்சல் துறை கௌரவித்துள்ளது.

சென்னையின் தியாகராயநகர் பகுதியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றும் பத்மா என்ற பெண் நேர்மைக்கு இன்னும் மதிப்பு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு. வறுமையும், சிரமமான வாழ்க்கையும் நிறைந்த சூழலில் கூட, அவர் தனது உள்ளத்தில் கொண்டிருந்த நல்லெண்ணத்தை விட்டுக்கொடுக்கவில்லை. ஜனவரி 11 அன்று, பத்மா தனது வழக்கமான தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

தி.நகர் வண்டிக்காரன் சாலை அருகே, முப்பத்தாம்மன் கோயில் தெரு பகுதியில் தரையில் ஒரு பிளாஸ்டிக் பை கிடப்பதை அவர் கவனித்தார். அந்தப் பையை எடுத்து திறந்து பார்த்தபோது, அதற்குள் ஒரு ஐஸ்கிரீம் டப்பாவில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த 45 சவரன் எடையுள்ள தங்க நகைகள் தெரிந்தன. அந்த நகைகளின் மதிப்பு சுமார் 45 லட்ச ரூபாய் என்பது பின்னர் தெரியவந்தது. பலருக்கு அது ஒரு பெரிய சோதனையாக இருந்திருக்கும். அவ்வளவு பெரிய தொகைக்கு சொந்தமான ஒரு பொருள் கிடைத்தால், யோசனைகள் பல வரும். ஆனால் பத்மாவுக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை. "உழைச்சு சாப்பிடணும்... அடுத்தவங்க காசு வேணாம்" என்று அவர் பின்னர் கூறிய வார்த்தைகள் அவரது எளிய ஆனால் உறுதியான கொள்கையைப் பிரதிபலிக்கின்றன.

உடனடியாக தனது மேற்பார்வையாளரிடம் தகவல் கொடுத்து, பாண்டி பஜார் காவல் நிலையத்தில் அந்த நகைகளை ஒப்படைத்தார். காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, அந்த நகைகள் நங்கநல்லூரைச் சேர்ந்த பரமேஷ் என்பவருக்கு சொந்தமானவை என்பது தெரியவந்தது. அவர் தவறுதலாக பையை விட்டுச் சென்றிருந்தார். உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, நகைகள் சொந்தக்காரரிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டன. அவருக்கு மிகப்பெரிய நிம்மதி கிடைத்தது. பத்மாவின் இந்த நேர்மையான செயல் விரைவிலேயே பரவலான பாராட்டுகளைப் பெற்றது.

இதையும் படிங்க: மீண்டும் திராவிட மாடல் 2.0 தான்... தமிழ்நாட்டுப் பெண்கள் மகுடம் சூட்டுவார்கள்.. அமைச்சர் நேரு உறுதி..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து, சால்வை அணிவித்து வாழ்த்தி, ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை காசோலையாக வழங்கினார். இதனிடையே, 45 சவரன் நகைகளை போலீசில் ஒப்படைத்த பத்மாவின் நேர்மையை பாராட்டி, அஞ்சல்துறை அவரது புகைப்படத்துடன் கூடிய சிறப்பு தபால் தலை வெளியிட்டு கவுரவித்துள்ளது. நேர்மைக்கு மணிமகுடம் சூட்டும் விதமாக அஞ்சல் துறை பத்மாவிற்கு சிறப்பு தபால் தலை வெளியிட்டு பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: பி.டி உஷாவின் கணவர் மறைவு…! மயங்கி விழுந்ததும் உயிர் பிரிந்த சோகம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share