×
 

100வது நாளை எட்டிய தூய்மை பணியாளர்கள் போராட்டம்..!! சென்னை ரிப்பன் மாளிகை முன்பு குவிந்த போலீஸ்..!!

தூய்மை பணியாளர்கள் போராட்டம் 100-வது நாளை எட்டியுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு இன்று காலை தொடங்கி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தூய்மைப் பணியாளர்களின் நீண்டகால போராட்டம் 100-வது நாளை எட்டியதன் எதிரொலியாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் அங்கு கூடும் திட்டத்தால் பரபரப்பு நிலவுகிறது. கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம், தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொடர்கிறது.

முதலில் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை வெளியே கூடி, 13 நாட்களுக்கு மேல் தொடர் உண்ணாவிரதம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகக் கூறி, தேன்மொழி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். நீதிமன்றம், அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதாகக் கூறி, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டது.

இதையும் படிங்க: வலுக்கும் கோரிக்கை... கடலில் இறங்கி போராடிய தூய்மை பணியாளர்கள் மீது பாய்ந்த வழக்கு... போலீஸ் அதிரடி ..!

இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 13-ம் தேதி நள்ளிரவில் போலீசார் அதிரடியாக 200-க்கும் மேற்பட்ட பணியாளர்களை குண்டுக்கட்டி கைது செய்தனர். அவர்கள் கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி சமூக நலக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இக்கைது சம்பவத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு இல்லாததால் போராட்டம் தொடர்ந்தது. 

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம் போராட்டத்தை கலைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இருப்பினும், போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கைகளை விடாப்பிடியாக முன்வைத்து, ரிப்பன் மாளிகை அருகே தொடர்ந்து போராட்டம் நடத்தினர். ஆகஸ்ட் முடிவடைந்த பின், போராட்டம் மெலிந்திருந்தாலும், மண்டலம் 5 மற்றும் 6-ஐ தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவுக்கு எதிராக அக்டோபர் 10-ம் தேதி மீண்டும் போராட்டம் தீவிரமடைந்தது. அப்போது மனு அளிக்க வந்த பணியாளர்கள் சென்ட்ரல் ரயில்வே நிலையம் அருகில் தடுத்து கைது செய்யப்பட்டனர்.

ராயபுரம் மற்றும் திரு.வி.க நகர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள், தங்கள் உரிமைகளுக்காக போராடுவதாகக் கூறுகின்றனர். "எங்கள் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் வேண்டும்" என போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர். இவர்களின் இந்த போராட்டம் நகரின் தூய்மைப் பணிகளை பாதித்துள்ளது. பல பகுதிகளில் குப்பை அகற்றம் தாமதமாகி, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  

முன்னதாக போராட்டக்காரர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தியதால், 51 பெண் பணியாளர்கள் உட்பட 83 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று 100-வது நாள் என்பதால், போராட்டக்காரர்கள் ரிப்பன் மாளிகை அருகில் கூட திட்டமிட்டிருந்ததாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, அண்ணா சதுக்கம் போலீசார் உட்பட நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு, நுழைவு வாயில்களைப் பூட்டி பாதுகாக்கின்றனர். 

இருப்பினும், போலீசார் குவிப்பால் பதற்றம் நிலவுகிறது. போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என உறுதியுடன் கூறுகின்றனர். இந்த சம்பவம், தமிழகத்தில் தொழிலாளர் உரிமைகள் குறித்த விவாதத்தை தூண்டியுள்ளது.

இதையும் படிங்க: #BREAKING தற்காலிக கொடி கம்பங்கள்... அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை மாநகராட்சி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share