"இல்லாத சரஸ்வதி நாகரிகத்தை தேடும் பாஜக"; பொருநை வரலாறை பாருங்க! பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் முதல்வர் அழைப்பு!
இல்லாத சரஸ்வதி நாகரிகத்தைத் தேடி அலையும் மத்திய பாஜக அரசுக்குத் தமிழர்களின் தொன்மை ஆதாரங்கள் தெரிவதில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் எழுதப்பட வேண்டும்" என்ற முழக்கத்துடன், தமிழர்களின் 3,200 ஆண்டுகாலப் பழம்பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று நெல்லையில் திறந்து வைத்தார். நாகரிகத்தின் தொட்டில் எனப்படும் பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தைச் சான்றுகளுடன் காட்சிப்படுத்தியுள்ள இந்த நிகழ்வு, தமிழக வரலாற்றின் மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி மலைச்சாலையில் சுமார் 13 ஏக்கர் நிலப்பரப்பிலே, 54,296 சதுர அடி பரப்பளவுல பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை முதலமைச்சர் திறந்து வைத்து, ஒவ்வொரு காட்சிக்கூடமாகச் சென்று பார்வையிட்டார். விழாவில் உணர்ச்சி பொங்கப் பேசிய அவர், "சான்றுகளை ஆய்வறிக்கையில் மட்டும் வெளியிட்டால் போதாது, அவற்றை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த அருங்காட்சியகங்களை அமைத்து வருகிறோம். ஒரு முதலமைச்சராக மட்டுமல்லாமல், ஒரு தமிழனாகவும் நான் இன்று பெருமைப்படுகிறேன். மக்கள் அனைவரும் தங்களது குடும்பத்தோடு வந்து இந்த அருங்காட்சியகத்தைப் பார்த்தே தீர வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
மத்திய பாஜக அரசை மிகக் கடுமையாகச் சாடிய முதலமைச்சர், "2021-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைக்க அறிவிப்பு வந்தது, ஆனால் இன்றுவரை அந்தப் பணிகள் தொடங்கப்படவில்லை. ஆனால் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு கீழடியைத் தொடர்ந்து பொருநையையும் உலகறிய செய்திருக்கிறோம்.
இதையும் படிங்க: நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு: 3000 ஆண்டுகாலத் தமிழரின் பெருமையை மீட்டெடுத்த முதலமைச்சர்!
பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் நேரிலே வந்து இதைப் பார்த்தால்தான் தமிழரின் நாகரிகம் எவ்வளவு தொன்மையானது என்பது அவர்களுக்குத் தெரியும்" என்று அன்புடன் அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்தார். இந்த வரலாற்றுப் பணியைச் சிறப்பாகச் செய்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ. வேலு மற்றும் ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் ஆகியோருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்த முதல்வர், "திராவிட மாடல் அரசு என்பது ஒரு கட்சியின் அரசு அல்ல, இது இனத்தின் அரசு" என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல, அது துடுக்கு மொழி!" – தமிமுன் அன்சாரி விமர்சனம்!