போதைப்பொருள் சர்ச்சை! அமைச்சர் சரத்குமாரிடம் விசாரணை! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு?
போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகார் குறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமாரிடம், தமிழக வெற்றிக் கழகத்தின் குழு விசாரணை நடத்தி வருகிறது.
மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமாரைச் சுற்றி எழுந்துள்ள போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் சர்ச்சை தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மையை அறிய தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உள்கட்சி விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சர்ச்சைக்கு காரணமாக, 2022-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின்போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அமைச்சர் சரத்குமார் கோகைன் உள்ளிட்ட போதைப்பொருளைப் பயன்படுத்தியதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சரத்குமார், உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட தனது குழந்தைக்கு மருந்து கொடுக்க மாத்திரையை தூளாக்கியதாக விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும், இந்த விளக்கத்தை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்துள்ள நிலையில், தி.மு.க. சார்பில் பல்வேறு இடங்களில் கண்டனப் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதே விவகாரத்தை மையமாக வைத்து சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து விவாதங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? அமைச்சர் சரத்குமார் சர்ச்சை வீடியோ! திமுக சரமாரி கேள்வி!
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் ஏழு சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இந்த விவகாரம் அரசுக்கு அரசியல் ரீதியாக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துமாறு முதல்வர் விஜய் உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, இரண்டு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் இரண்டு மாவட்டச் செயலர்கள் அடங்கிய குழு அமைச்சர் சரத்குமாரிடம் விளக்கம் கேட்டு விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் நேரில் ஆஜராகி தனது தரப்பு ஆதாரங்களை சமர்ப்பித்ததாகவும், தனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை என்று குடும்பத்தின் முன்னிலையில் உறுதியாக தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், சம்பவம் தொடர்பாக அமைச்சரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் தொடர்புடையவர்களிடமும் தனிப்பட்ட முறையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிங்க: கரூர் கணக்கு...! இன்னும் இருக்கு... ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஆதவ் அர்ஜுனா..!!