வைத்திலிங்கம் முடிவு துரதிஷ்டவசமானது..! எனக்கு ஒரே நிலைப்பாடு தான்...! சசிகலா ஆதங்கம்..!
வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது குறித்து சசிகலா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்த நிலையில் சசிகலா அதிருப்தி தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கத்தின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது என கூறினார். அவர் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் என்றும் விமர்சித்தார். இதனை அவரோடு இத்தனை காலம் உடன்பயணித்தவர்கள், ஏன் அவரது தொகுதியை சார்ந்த பொதுமக்கள் கூட இந்த முடிவைஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று கூறினார்.
ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான் என்றும் அது ஒரு சிலரின் சுயநலத்தால் நடப்பதே தவிர வேறொன்றுமில்லை என்றும் உறுதிப்பட கூறினார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம் எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம் என்று சசிகலா குறிப்பிட்டார். இது ஏழை, எளிய, சாமானிய மக்களுக்காகவே உருவான இயக்கம் என்றும் ஜெயலலிதா இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும் என்று சூளுரைத்தார் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.
ஆனால், இன்றைக்குதங்களை தாங்களே தலைவர்களாக அறிவித்துக் கொண்டவர்கள் இயக்கத்தை காப்பாற்ற முடியாமல் தோல்வியடைந்து இருப்பதைத்தான் இது காட்டுகிறது என்றும் இன்றைக்கு யாராக இருந்தாலும் கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு, அழிக்கின்ற செயல்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாத செயல் என்றும் குற்றம் சாட்டினார். இது போன்ற கட்சிக்கு பாதகமான நடவடிக்கைகள் மூலம் திமுகவினரின் ஆசைதான் நிறைவேறியிருப்பதாக தெரிகிறது என்றும் இதைத்தான் திமுகவினர் அனுதினமும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள் எனவும் கழகத்தை அழிக்க துடிக்கும் திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் நம் கழகத்தினரே செயல்படுவது மிகவும் வேதனையாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வாங்க..! சரித்திர வெற்றி படைப்போம்...! இபிஎஸ்க்கு நன்றி சொன்ன TTV தினகரன்..!
இது போன்ற செயல்கள் நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றது என்று கருத்து தெரிவித்த அவர், இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஆலமரத்திற்கு கேடாக அமைந்து விடும் என்றும் தெரிவித்தார். ஆனால் எனது நிலைப்பாடு ஒரே நிலைப்பாடுதான்., எனது இறுதி மூச்சு உள்ளவரை தீயசக்தி திமுகவை எதிர்ப்பது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூட்டணியுடன் கைகோர்த்த அமமுக.. எனக்கு ரொம்ப மகிழ்ச்சி..!! நெகிழ்ந்த பியூஸ் கோயல்..!!