சாஸ்த்ரா பல்கலை. ஆக்கிரமிப்பு நிலத்துக்கு பதில் மாற்று நிலம் பெறலாமே! தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!
சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 31.37 ஏக்கர் நிலத்திற்குப் பதிலாக மாற்று நிலத்தை ஏன் பெறக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் 31.37 ஏக்கர் நிலத்திற்குப் பதிலாக, அந்நிறுவனத்திடமிருந்து மாற்று நிலத்தையோ அல்லது இழப்பீட்டுத் தொகையையோ தமிழ்நாடு அரசு ஏன் பெற்றுக்கொள்ளக் கூடாது என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், இதுகுறித்து விரிவான ஆலோசனை நடத்தி அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் அறிக்கையாகத் தெரிவிக்க வேண்டும் என அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரத்தில் திறந்தவெளிச் சிறைச்சாலை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த 31.37 ஏக்கர் புஞ்சை தரிசு நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்து, அதில் பிரம்மாண்டக் கல்வி வளாகக் கட்டடங்களைக் கட்டி வகுப்புகளை நடத்தி வருவதாகப் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை உடனடியாக வருவாய்த்துறை மீட்க வேண்டும் என கடந்த ஜனவரி 9-ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வருவாய்த்துறையினர் அந்த நிலத்தை மீட்டெடுத்து அறிவிப்புப் பலகையையும் நட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில், மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், தற்போது பல்கலைக்கழகம் செயல்பட்டு வரும் அந்த இடத்திற்குப் பதிலாக, சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான மாற்று நிலத்தை வழங்கவோ அல்லது தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் அந்த நிலத்திற்கான உரிய இழப்பீட்டுத் தொகையை அரசுக்கு முழுமையாகச் செலுத்தவோ நிர்வாகம் தயாராக உள்ளது என்று வாதாடினார்.
இதையும் படிங்க: குடியிருப்பு உரிமைக்காக போராடிய கம்யூனிஸ்ட் தோழர்கள் மீதான வழக்கை ரத்து செய்க! வீரபாண்டியன் வலியுறுத்தல்!
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நிலத்தில் கல்வி நிலையம் இயங்கி வரும் சூழலில், மாற்று நிலத்தையோ பணத்தையோ அரசு ஏன் பெற்றுக்கொள்ளக் கூடாது? என வினவினர். இதற்குத் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹரிப்ரியா மற்றும் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 1985 முதல் படிப்படியாக இந்த 31.37 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது; அரசின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று வாதிட்டனர்.
எனினும், கல்வி சார்ந்த சூழலையும் மாணவர்களின் நலனையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு பரிசீலித்து ஒரு உரிய நல்ல முடிவை எடுக்கலாமே என யோசனை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அரசின் உயர்மட்ட ஆலோசனையைப் பெற்றுத் தெரிவிக்க அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து, மாற்று நிலத்தைப் பெறுவது குறித்துப் பரிசீலித்துப் பதில் மனு தாக்கல் செய்யத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: பேருந்து கட்டணத்தை உயர்த்த கோரிய வழக்கு! 4 வாரங்களில் அறிக்கை தர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!