குடியிருப்பு உரிமைக்காக போராடிய கம்யூனிஸ்ட் தோழர்கள் மீதான வழக்கை ரத்து செய்க! வீரபாண்டியன் வலியுறுத்தல்!
மக்களின் குடியிருப்பு உரிமைக்காக போராடிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக வாடகை செலுத்தி வாழ்ந்து வந்த ஏழை எளிய மக்களின் குடியிருப்பு உரிமைகளைப் பாதுகாக்கக் களமிறங்கிப் போராடிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது இந்து சமய அறநிலையத்துறை கொடுத்த புகாரின் பேரில் பதியப்பட்டுள்ள வழக்குகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் மிகக் காட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஆதிசென்ன கேசவ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை எளிய உழைக்கும் மக்கள் உரிய வாடகை செலுத்தித் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அங்கு வசித்து வந்த 20 குடும்பங்களைச் சேர்ந்த மக்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டும் எனத் தொடர்ந்து அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் விடுக்கப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு, அந்த 20 ஏழைக் குடும்பங்களின் குடியிருப்புகளும் இரக்கமின்றி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.
இதையும் படிங்க: தற்போதைய சூழலில் தனித்து போட்டி! திருவாரூரில் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!
அரசுக்குச் சொந்தமான கோவில் நிலத்தில் உரிய வாடகை செலுத்தி நீண்ட நெடுங்காலமாக வசித்து வரும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தையும் குடியிருப்பு உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு ஆதரவான சட்டப்பூர்வ நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை உறுதியாக எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறவழியில் உறுதியான போராட்டத்தை முன்னெடுத்தனர்.
ஆனால், எளிய மக்களின் வசிப்பிட உரிமைக்காகக் குரல் கொடுத்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாவட்டத் துணைச் செயலாளர் அபிஷேக், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் ர.சௌமியா, துணைத் தலைவர் கமலக்கண்ணன் உள்ளிட்ட 8 முன்னணி நிர்வாகிகள் மீது இந்து சமய அறநிலையத்துறை அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
மக்களின் நியாயமான போராட்டத்தை ஒடுக்கும் வகையில் புனையப்பட்டுள்ள இந்த ஜனநாயக விரோத வழக்குகளைத் தமிழ்நாடு அரசு எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுவின் சார்பில் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்: மதுராந்தகத்தில் சிபிஎம் சுகந்தி, தாராபுரத்தில் சிபிஐ லட்சுமணன் போட்டி!