அப்படி நடந்திருக்க கூடாது! பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்.. வருத்தம் தெரிவித்த துரை வைகோ..!
சாத்தூர் மதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றிக் கொண்டிருந்தபோது, சில தொண்டர்கள் வெளியேறியதால் இருக்கைகள் காலியானதை செய்தியாளர்கள் படம் பிடித்தனர். இதனைக் கண்ட வைகோ, காலி இருக்கைகளை படமெடுப்பதை விமர்சித்து, செய்தியாளர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, மதிமுக தொண்டர்கள் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
செய்தியாளர்கள் தாக்கப்பட்டதுடன் அவர்களின் ஒளிப்பதிவு கருவிகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பத்திரிகையாளர்கள் சங்கம், வைகோ மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. வைகோ தனது ஆக்ரோஷமான மற்றும் உணர்ச்சிபூர்வமான பேச்சுகளால் புகழ்பெற்றவர். அவரது உரைகள் தமிழக மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
வைகோவின் அரசியல் தத்துவம் சமூக நீதி, தமிழ் தேசியம், மற்றும் மாநில உரிமைகளை அடிப்படையாகக் கொண்டது. இவர் தமிழகத்தின் நீர்ப்பிரச்சினைகள், கல்வி, மற்றும் விவசாயிகளின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அரசியல் அனுபவம் வாய்ந்த ஒரு மூத்த தலைவர் செய்தியாளர்களிடம் இப்படி நடந்து கொண்டது அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு தனிப்பட்ட முறையிலும் கட்சி சார்பிலும் வருத்தம் தெரிவித்து கொள்வதாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். பத்திரிகை மற்றும் ஊடகங்களை என்றுமே மதிக்கும் இயக்கம் மதிமுக எனவும் சாத்தூரில் நடந்தது வருந்தத்தக்கது எனவும் கூறினார். சாத்தூரில் நடந்த நிகழ்ச்சியின் வைகோ பேசியபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சில தொண்டர்கள் வெளியே வந்து சென்றதாகவும் அதனை செய்தியாளர்கள் படம் பிடித்ததால் வைகோ கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்தார்.
உள்ளே இருந்து செல்லும் தொண்டர்களை படம் பிடிக்கிறீர்கள் வெளியே இருந்து எத்தனை தொண்டர்கள் இதனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என வைகோ கூறியதாக தெரிவித்தார். அதற்குப்பின் தொண்டர்கள் சிலர் தாக்குதல் ஈடுபட்டது எதிர்பாராத சம்பவம் என்றும் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: மதிமுகவுக்கு இரட்டை இலக்க தொகுதி... நான் சொன்னேனா? வைகோ ஆவேசம்..!
இதையும் படிங்க: மதிமுகவில் வெடித்தது பிரளயம்... துரோகி பட்டம் கட்டி அனுப்ப பாக்குறாரு... வைகோ மீது மல்லை சத்யா குற்றச்சாட்டு..!