மதிமுகவில் வெடித்தது பிரளயம்... துரோகி பட்டம் கட்டி அனுப்ப பாக்குறாரு... வைகோ மீது மல்லை சத்யா குற்றச்சாட்டு..!
துரோகி பட்டம் கொடுத்து கட்சியில் இருந்து வெளியேற்ற பார்க்கிறார் என வைகோ மீது மல்லை சத்யா குற்றம் சாட்டியுள்ளார்.
மல்லை சத்யா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவராகவும், துணைப் பொதுச்செயலாளராகவும், வைகோவின் நம்பிக்கைக்குரிய சேனாதிபதி என அழைக்கப்படுபவராகவும் இருப்பவர் மல்லை சத்யா. 1994 இல் வைகோ திமுகவிலிருந்து வெளியேறி மதிமுகவை தொடங்கியபோது, மல்லை சத்யா அவருடன் இணைந்து கட்சியின் ஆரம்பகால நிர்வாகிகளில் ஒருவராக உருவெடுத்தார். அவரது அமைப்புத் திறனும், தொண்டர்களை ஒருங்கிணைக்கும் திறமையும் அவரை வைகோவின் நம்பிக்கைக்குரியவராக மாற்றியது.
இந்த நிலையில், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிற்கு, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டது. துரை வைகோ, முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மல்லை சத்யாவை மறைமுகமாக குறிப்பிட்டு, கட்சிக்கும் தலைமைக்கும் பழி சுமத்தும் ஒருவரால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை என்று கூறினார். இதனைத்தொடர்ந்து இருவரிடமும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இருவரும் கை குலுக்கிக் கொண்டு சமாதானம் அடைந்தனர்.
இந்நிலையில், விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக வைகோ குற்றம்சாட்டிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைகோவின் குற்றசசாட்டு தொடர்பாக பேசிய மல்லை சத்யா, துரோகி பட்டம் கொடுத்து கட்சியில் இருந்து தன்னை வைகோ வெளியேற்ற பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் கட்டுகிறார் என கூறினார். வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய தன்னை துரோகி என சொல்லும் அளவுக்கு அவர் துணிந்துள்ளதாகவும், வாரிசு அரசியலுக்காகத்தான் என வைகோ சொன்ன வார்த்தையை தாங்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கேமராவை பிடுங்கி போடுங்க.. நிதானத்தை இழந்த வைகோ! மன்னிப்புக்கோர நயினார் வலியுறுத்தல்..!
இதையும் படிங்க: மதிமுக எம்.எல்.ஏ.வுக்கே இப்படியொரு கதியா? - அதிமுக முன்னாள் கவுன்சிலரால் கதறல்...!