×
 
☰

பக்தர்களே கவனிங்க..! "மகாளய அமாவாசை"..! சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி..!

சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில், சித்தர்களின் புனித பூமியாகவும், ஆன்மிகத் தலமாகவும் பக்தர்களால் போற்றப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு தினசரி அனுமதி இல்லை. மாதம்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி மற்றும் முக்கிய திருவிழா நாட்களில் மட்டுமே வனத்துறை அனுமதியுடன் பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியும்.

ஆடி அமாவாசை, தை அமாவாசைக்கு அடுத்து புரட்டாசி மாத மகாளய அமாவாசையும் இங்கு சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.இந்த ஆண்டு புரட்டாசி மகாளய அமாவாசை அக்டோபர் 10ஆம் தேதி வருகிறது. இதை முன்னிட்டு வனத்துறையினர் அக்டோபர் 8 முதல் 11 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சுந்தர மகாலிங்கம் சுவாமியை தரிசிக்க அனுமதி வழங்கியுள்ளனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாணிப்பாறை அடிவாரம் வழியாகவே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி உண்டு. இந்த நேரத்துக்குள் மலையேறி இறங்க வேண்டும். மகாளய அமாவாசை நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இங்கு குவிவார்கள்.சதுரகிரி மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்திருப்பதால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், மதுபானங்கள் போன்றவற்றை எடுத்துச் செல்லக் கூடாது. பக்தர்களின் பாதுகாப்பை முன்னிட்டு அனுமதிக்கப்பட்ட நாட்களில் கனமழை பெய்தால் அல்லது மழைப் பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால், அன்றைய தினம் மலையேறத் தடை விதிக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: அண்ணாமலையாருக்கு அபிஷேகம்... தி.மலை கோவிலில் புதிய கட்டுப்பாடு..! முக்கிய அறிவிப்பு..!

வானிலை சீராக இருந்தால் மட்டுமே அனுமதி தொடரும்.மலைப்பாதை கடினமானதாக இருப்பதால், உடல்நலம் சரியில்லாதவர்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் மலையேறும்போது கூடுதல் கவனம் தேவை. வனத்துறையினர் அடிவாரத்தில் சோதனைச் சாவடி அமைத்து, பக்தர்களின் உடைமைகளைச் சோதித்த பிறகே அனுமதி வழங்குகின்றனர். கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் மற்றும் நந்திக்குச் சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறும். மகாளய அமாவாசை நாளில் பித்ரு வழிபாடு, சிறப்பு பூஜைகள் என ஆன்மிகச் சடங்குகள் அதிகமாக நடைபெறும் என்பதால், பக்தர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுச் செல்வது நல்லது.

 

இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி..! திமுக நிர்வாகி, சார்பதிவாளர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி..!! இடியை இறக்கிய கோர்ட்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share