சுட்டெரிக்கும் வெயில்.. தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு..?? வானிலை மையம் சொல்வது என்ன..??
வெப்பநிலை குறித்த வானிலை அறிக்கையின் அடிப்படையில் பள்ளி திறப்பு குறித்து முடிவெடுக்கப்படுமென தமிழக அரசு தெரிவித்தது.
தமிழ்நாட்டில் வரும் ஜூன் 1-ம் தேதி பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக அந்தத் தேதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளிகள் திறப்பை தாமதப்படுத்தும் முடிவு எடுக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாகத் தெரிகிறது.
மாணவர்களின் நலன் கருதி, பள்ளி திறக்கும் நாளிலேயே பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மே மாத இறுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பகல் நேர வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகும் சூழலில், சிறு குழந்தைகள் உள்ளிட்ட மாணவர்கள் பாதிக்கப்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனால், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வெப்பநிலை குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் தகவல் பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார். இதையடுத்து, இன்று முதலமைச்சர் விஜய், அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். வானிலை ஆய்வு மைய இயக்குநர் தமிழக அரசுக்கு அளித்த அறிக்கையில், “ஜூன் 1 முதல் 4 வரை தமிழகத்தில் வெப்பநிலை கணிசமாக அதிகமாக இருக்கும். ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகுதான் வெப்பம் சற்று குறையும் வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2 நாட்கள் அடித்து ஊற்றக் காத்திருக்கும் கனமழை! நாளை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
இந்த அறிவிப்பு அரசுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில், குழந்தைகளின் உடல்நலத்தை முன்னிட்டு பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் வெப்ப அலைகளால் மாணவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் நினைவுகூரப்படுகின்றன. எனவே, பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்த பின்னரே பள்ளிகளைத் திறக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஜூன் 8-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் உறுதியான பின்னர், பாடப்புத்தக வழங்கல் உள்ளிட்ட ஏற்பாடுகளும் அதற்கேற்ப மாற்றியமைக்கப்படும். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி அரசு எடுக்கும் இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த ஆண்டு கோடை வெப்பம் சற்று அதிகமாக இருப்பதால், பள்ளி திறப்பு தள்ளிவைப்பு முடிவு மாணவர்களுக்கு நிம்மதியைத் தரும் எனக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: வெளுத்து வாங்கப்போகும் மழை..!! லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கானு தெரிஞ்சிக்கோங்க..!!