திமுக கண்டுக்காம வேடிக்கை பாக்குது! MRF பணியாளர்களுக்கு குரல் கொடுத்த சீமான்...!
சென்னை எம்.ஆர்.எஃப். நிறுவனத்தில் பயிற்சி முடித்த பணியாளர்ளுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தினார்.
சென்னையில் உள்ள எம்.ஆர்.எப். நிறுவனத்தில் பயிற்சியாளர்களாக பணியில் சேருகின்ற தொழிலாளர்களை சட்டப்படி இரண்டு ஆண்டுகளுக்குள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக 6 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களை வெறும் பயிற்சியாளர்களாகவே உற்பத்தியில் ஈடுபடுத்தி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தமிழ்நாட்டு இளைஞர்களின் உழைப்பை சுரண்டும் கொடும்போக்கு என்றும் தனது வன்மையான கண்டனத்தையும் கூறினார்.
எம்ஆர்எஃப் நிறுவனத்தின் உழைப்புச்சுரண்டலுக்கு எதிராக தொழிற்சங்க நிர்வாகிகள் நிர்வாகத்துடன் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் இதுவரை அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் அதுமட்டுமின்றி, எம்ஆர்எஃப் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான குழு மருத்துவக் காப்பீடானது நிர்வாகத்தின் பணத்திலிருந்து மேற்கொள்ளப்படாமல் கடந்த 20 ஆண்டுகளாக தொழிலாளிர்களின் ஊதியத்திலேயே பிடித்தம் செய்யப்படுவது மற்றுமொரு பெருங்கொடுமை என்றும் கூறினார்.
எம்ஆர்எஃப் நிர்வாகமானது இந்த ஆண்டிற்கான மருத்துவ காப்பீட்டுக்கான முன் வைப்புத் தொகையை வழங்க மறுப்பதாகவும் கூறிய சீமான், கடந்த இரண்டு மாதங்களாக, மருத்துவ காப்பீடு புதுப்பிக்கப்படாத சூழ்நிலையில் நோயுற்ற தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருவதாக கூறினார் . தொழிலாளர் நலச்சட்டத்தின் விதிமுறைகள் எதுவொன்றையும் பின்பற்றாத சென்னை எம்ஆர்எஃப் நிறுவனத்தின் தொழிலாளர் விரோதபோக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் சார்பாக தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையிடம் பல முறை மனு அளித்தும் திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், வேடிக்கை பார்ப்பதுதான் கொடுமையின் உச்சம் என சாடினார்.
இதையும் படிங்க: கெளம்பு கெளம்பு ஆபிஸுக்கு.. ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்..!!
ஆகவே, தமிழ்நாடு அரசு சென்னை எம்ஆர்எஃப் தொழிற்சாலை நிர்வாகத்திடம் தொழிலாளர் நலத்துறை மூலம், உடனடியாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் பணி நிரந்தரம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தவெக மீது பொய் புகார்... FACT CHECK-ல் வெட்ட வெளிச்சமான உண்மை...!