×
 

காவிரி நீர் மேலாண்மை கூட்டம்..! இப்போதைக்கு நடத்தக்கூடாது..! சீமான் வலியுறுத்தல்..!

தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய அரசுகள் அமைந்த பிறகு காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் நடத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி இருக்கிறார். காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் 29.04.2026 அன்று நடைபெறும் என்று அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்றும் கூறினார் .

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று, தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் கூட்டத்தை நடத்த காவிரி மேலாண்மை ஆணையம் முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றினை பங்குகொள்ளும் மூன்று முக்கிய மாநிலங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இன்னும் அமையாத நிர்வாகச் சூழலில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை அவசர அவசரமாக கூட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது என்றும் கேட்டுள்ளார்.

முழுமையான அதிகாரம் பெறாத அரசுகளால் எப்படி முக்கிய முடிவுகளை எடுக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். மாநிலங்களின் உயர் அதிகாரிகள் வேற்று மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கும் சூழலில் மண்ணின் உரிமைகளையும், மக்களின் உணர்வுகளையும் எப்படி உரத்து எழுப்புவார்கள் என்றும் நடைபெறவுள்ள கூட்டத்தில் மேகதாது அணை கட்டுமானம் குறித்த முக்கிய விவாதங்கள் நடைபெறவுள்ள நிலையில், இதர மூன்று மாநிலங்களில் அதிகாரம் படைத்த அரசுகள் இல்லாத நிலையில், கூட்டம் முழுக்க முழுக்க ஒருபக்க சார்பாக மாறி கர்நாடகாவுக்கு சாதகமாகிவிடாதா எனவும் கேட்டு உள்ளார்.

இதையும் படிங்க: நாதக கர்ப்பிணி வேட்பாளர் மீதான தாக்குதல்..! திமுகவினரை கைது செய்யணும்..! கண்டன ஆர்ப்பாட்டம்..!

யாருடைய உத்தரவின் பேரில் இத்தனை அவசரமாக காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டப்படுகிறது என்றும் யாருடைய நலனுக்காக இத்தனை அவசரமாக ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது எனவும் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்க, கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரசு அரசு மற்றும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கூட்டுச் சூழச்சியாகவே இக்கூட்டம் நடத்தப்படுவதாக தோன்றுகிறது எனவும் சாடினார். கச்சத்தீவு போன்று தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் இத்தகைய வரலாற்றுச் சதிகளை இனியும் அனுமதிக்க முடியாது என்றும் ஆகவே, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று வலியுறுத்துவதாகவும் சீமான் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிரச்சாரம் ஓய்ந்தும் வாக்குச் சேகரிப்பு..! சீமான் மீது புகார்..! வழக்குப்பதிவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share