×
 

ஏறெடுத்து பார்க்க கதியில்லாமல் நிற்கும் தொழிலாளர்கள்..! சீமான் வேதனை..!!

ஏறெடுத்து பார்க்க கதியில்லாமல் தொழிலாளர்கள் நிற்பதாக சீமான் வேதனை தெரிவித்தார்.

உலகத்தொழிலாளர் நாளில் உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க உறுதியேற்போம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ”காலுக்குச் செருப்புமில்லை கால் வயிற்றுக் கூழுமில்லை பாழுக்கு உழைத்தோமடா என் தோழனே பசையற்றுப் போனோமடா” எனப் பாடிய பொதுவுடைமைப் போராளி ஜீவானந்தம் பாடலைப்போல் எந்தக் காலத்திலும் யாராலும் ஏறெடுத்துப் பார்க்க கதியற்ற, எவராலும் திரும்பிப் பார்க்கப்படாத யாருமற்றவர்களாகவே உலகெங்கும் தொழிலாளர் பெருமக்கள் இன்றளவும் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டத் தொழிற்புரட்சியின் காரணமாக எவ்வித விதிமுறைகளும், சட்டத்திட்டங்களும் இல்லாமல் இலாபம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்ட முதலாளிகளால் தொழிலாளர்கள் அடிமைகள் போல நடத்தப்பட்டனர் என்றும் இதனைக் கண்டித்து 1886 ஆம் ஆண்டு மே 1 அன்று 8 மணி நேர வேலை, 8 மணி நேர உறக்கம், 8 மணி நேர ஓய்வு, என்கின்ற அடிப்படை உரிமைகளை நிறைவேற்றக் கோரியும், உழைப்புக்கேற்ற ஊதியம் என்பதை வலியுறுத்தியும் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு மிகப்பெரிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. மே - 4 அன்று அமெரிக்காவின் சிகாகோ ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள் என்பதையும் குறிப்பிட்டார்.

அவர்களின் போராட்டத்தை அமெரிக்க வல்லாதிக்க அரசு அடக்கி ஒடுக்க நினைத்து ஏராளமானத் தொழிலாளர்களைக் கொன்று குவித்தது. எனினும் தொழிலாளர்களின் எழுச்சிமிகுந்தப் புரட்சிக்கு அடிபணிந்த அமெரிக்க வல்லாதிக்க அரசு இறுதியில் 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற அடிப்படை ஊதியம் என்கின்ற கோரிக்கைகளுக்கு ஒத்துக்கொண்டது என்றார். அந்த வரலாற்று வெற்றியை நினைவுகூறும் வகையில், பாரீசில் நடந்த சர்வதேச தொழிலாளர் கூட்டத்தில், 1890 ஆம் ஆண்டு மே 1 முதல் உலகளாவிய தொழிலாளர் தினமாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனவும் சீமான் கூறினார்.

இதையும் படிங்க: காவிரி நீர் மேலாண்மை கூட்டம்..! இப்போதைக்கு நடத்தக்கூடாது..! சீமான் வலியுறுத்தல்..!

 தமிழ்நாட்டில் சென்னை‌ கடற்கரையில் 1923 ஆம் ஆண்டு மே 1 அன்று பெரும்புகழ் கொண்ட சிங்காரவேலர் தலைமையில் உழைப்பாளர் நாள் முதன்முறையாக கொண்டாடப்பட்டது. அதனடிப்படையில் இந்தியப் பெருநிலம் எங்கும் மே 1 அன்று உழைப்பாளர்கள் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று தொடங்கி இன்றுவரை தொழிலாளர் நாள்தான் கொண்டாடப்படுகின்றதே தவிர தொழிலாளர்களை உலகம் கொண்டாடவில்லை. கொண்டாட்டத்துக்கு உரியவர்களாக தொழிலாளர்களை நடத்தவும் இல்லை என்பதுதான் வரலாற்றுப்பெருந்துயரம் என்று தெரிவித்தார். உழைப்பாளர் உரிமைபெற்ற 'மே நாளில்' உழைப்புச் சுரண்டலுக்கெதிராக ஒன்றுபட்டு தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்க உறுதியேற்போம் என்று கூறினார்.

இதையும் படிங்க: நாதக கர்ப்பிணி வேட்பாளர் மீதான தாக்குதல்..! திமுகவினரை கைது செய்யணும்..! கண்டன ஆர்ப்பாட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share