×
 

மேகதாதுவுக்கு நடுவர் மன்றமா..? இன்னும் மோசமாகும்... எச்சரித்த சீமான்..!

மேகத்தாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தினார்.

மேகதாது அணையை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்க தவெக அரசு கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்து என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் ஆளும் தவெக அரசின் போக்கு மிக மிகத் தவறான முடிவு என்றார். நடுவர் மன்றம் கோரும் திருத்தத்தை சட்டமன்றத் தீர்மானத்தில் எதிர்க்கட்சியான திமுக சேர்க்கக் கோரியதும், அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டு, திருத்தித் தீர்மானத்தை இயற்றியிருக்கும் செயல்பாடு ஆளும் தவெக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் காவிரி நதிநீர் உரிமையில் அக்கறையோ, அடிப்படைப்புரிதலோ இல்லை என்பதையே காட்டுகிறது என்றும் கூறினார்.

இத்தோடு, கடந்த திமுகவின் ஆட்சியிலேயே நடுவர் மன்றம் கோரிக் கடிதம் எழுதப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் விஜய்யும் கூறியிருப்பது கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார். மேகதாது அணை விவகாரத்தில் புதிதாக ஒரு நடுவர் மன்றத்தை நாடினால், அது தற்போதிருக்கும் நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்தாக முடியும் எனும் குறைந்தபட்சப் பார்வையும், தொலைநோக்குச் சிந்தனையும்கூட இல்லாது, முன்வைக்கப்படும் நடுவர் மன்றக் கோரிக்கையை மிகக் கடுமையாக எதிர்ப்பதாக கூறியுள்ளார்.

தமிழ்நாட்டு அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பது ஏற்கனவே இருக்கும் விதிகளின்படியே சட்ட விரோதம்தான் எனும்போது புதிய நடுவர் மன்றம் என்பது தேவையில்லாத ஒன்றாகும். ஒருவேளை, நடுவர் மன்றம் புதிதாக அமைக்கப்பட்டால் சிக்கலை மேலும் நீட்டிக்கவும், இன்னும் பல காலம் அதனை இழுத்துக்கொண்டே போகவும் வழிவகை செய்திடும். ஒருவேளை, அந்நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மேகதாது அணை கட்ட ஒப்புதல் வழங்குமானால் சட்டப்பூர்வமாக இருக்கும் கடைசி வாய்ப்பையும் தமிழ்நாடு இழக்க நேரிடும் எனவும் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கொடுமை..! அரசு மருத்துவமனைகளில் பறிபோகும் அப்பாவி உயிர்கள்... கொந்தளித்த சீமான்..!!

காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் முடிவைக் கைவிட்டு, அத்தீர்மானத்தைப் பின்வாங்கி, புதிய தீர்மானத்தை இயற்ற வேண்டுமெனவும், அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து, தமிழ்நாட்டுக்குரிய காவிரி நதிநீர் பங்கீட்டு உரிமையை உறுதிசெய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய சட்டப்போராட்டங்களையும், ஆக்கப்பூர்வப் பணிகளையும் தொடங்கிட வேண்டுமெனவும் தவெக அரசுக்கு வலியுறுத்தி இருக்கிறார். 

இதையும் படிங்க: "சொன்னா கேளுங்க வேணாம்"..! கடலூரில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்..! மீன்பிடி தொழிலுக்கே பேராபத்து..! எச்சரித்த சீமான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share