விளையாட்டு திடலை அழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை... போராட்டம் வெடிக்கும்! சீமான் எச்சரிக்கை!
திருவேற்காடு கோலடி அண்ணல் அம்பேத்கர் விளையாட்டுத்திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
ஆவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு நகராட்சி கோலடி பகுதியில் 13 ஏக்கர் பரப்பளவில் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் பெயரில் அமைந்துள்ள விளையாட்டுத் திடலில் 1000 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசுக்கு வேறு இடமே கிடைக்கவில்லையா? நெருக்கடி மிகுந்த சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகரில் அரசுக்கு சொந்தமான விளையாட்டு திடல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே உள்ளன., அதனையும் அழித்து முடிக்க திமுக அரசு துடிப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சியில் புதிதாக விளையாட்டு திடல்கள்தான் உருவாக்கப்படவில்லை என்றும் ஏற்கனவே இருக்கும் விளையாட்டு திடல்களையும் அழிப்பதென்பது முறைதானா? விளையாட்டுத் திடல்களை எல்லாம் வேறு பணிகளுக்காக அழித்துவிட்டால் விளையாட்டு வீரர்களுக்கு எங்கே சென்று பயிற்சி அளிக்கப் போகிறீர்கள்? இதுதான் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களின் திறன்களை உலகத் தரத்திற்கு வளர்க்கும் முறையா? என சாடினார். தினமும் பல நூறு பிள்ளைகள் பயிற்சி பெறும் விளையாட்டுத்திடலை அழிக்கும் அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு தெரியுமா? தெரியாதா? அல்லது அவருடைய அனுமதியோடுதான் விளையாட்டுத் திடல் அழிக்கப்படுகிறதா? அண்ணல் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்த உதயநிதி, அவர் பெயரில் உள்ள திடலை அழிக்க அனுமதிப்பது நியாயம்தானா? என்ன பல்வேறு கேள்விகளை சீமான் முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: மூக்குத்தியை கழற்றி தேர்வு எழுத வைக்கிறீர்களே., பயங்கரவாதிக்கு உடனே பதிலடி கொடுக்க தெரியாதா? சீமான் காட்டம்..!
கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மீது காவல்துறையை ஏவி, அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு, கைது செய்து சிறையிலடைப்பது கொடுங்கோன்மை என்றும் திருவேற்காடு கோலடி அண்ணல் அம்பேத்கர் விளையாட்டுத் திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட்டு, மக்கள் பயன்பாட்டில் இல்லாத வேறு இடத்திற்கு அதனை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இல்லையென்றால், மக்கள் திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி விரைவில் முன்னெடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ED வந்தால் ஓடிப் போய் மோடியை பார்க்கிறார் ஸ்டாலின்... சீமான் செம்ம கலாய்!