டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்கக்கூடாது.. சீமானுக்கு தடை போட்ட ஐகோர்ட்..!!
டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க சீமானுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம், திருச்சி மத்திய மண்டல டிஐஜி வருண் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு, வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கின் ஒரு பகுதியாகும், இதில் சீமான் மற்றும் அவரது கட்சியினர் வருண் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அவதூறான கருத்துகளை பொதுவெளியிலும், சமூக ஊடகங்களிலும் பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் 2021ஆம் ஆண்டு தொடங்கியது, வருண் குமார் திருவள்ளூர் எஸ்.பியாக இருந்தபோது, நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ‘சாட்டை’ துரைமுருகனை கைது செய்ததை அடுத்து உருவானது. இதனைத் தொடர்ந்து, சீமான் வருண் குமார் மீது சாதி அடிப்படையிலான அவதூறு கருத்துகளை கூறியதாகவும், கட்சியினர் ஆன்லைனில் அவமதிக்கும் உள்ளடக்கங்களை பதிவிட்டதாகவும் வருண் குமார் குற்றம்சாட்டினார். இந்த வழக்கில், வருண் குமார் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்ததாகவும், இது தனது அதிகாரப்பூர்வ பதவியை பயன்படுத்தி தொடரப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்காதது ஏன்? கேள்வி எழுப்பிய சென்னை ஐகோர்ட்..!
இதனிடையே இந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று சீமான் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். சீமான் தரப்பில், “வருண் குமார் பற்றி சீமான் அவதூறாக எதுவும் பேசவில்லை. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே, இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் தனக்கு எதிராக ஆதாரம் இல்லாத அவதூறு கருத்துக்களை தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்க கோரியும், ரூபாய் 2.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் டிஐஜி வழக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் இன்று டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க சீமானுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு மனுவிற்கு பதிலளிக்க சீமானுக்கு உத்தரவிட்டு விசாரணை அடுத்த வாரம் ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த இடைக்கால தடை உத்தரவு, வழக்கு முடியும் வரை சீமான் வருண் குமார் குறித்து எந்தவொரு அவதூறு கருத்தையும் தெரிவிக்கக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த உத்தரவு தமிழக அரசியல் மற்றும் சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டிரான்ஸ்பார்மர் கொள்முதல் வழக்கு.. செந்தில் பாலாஜிக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு என்ன..?