மணல் திருட்டை எதிர்த்த விவசாயிகள் பொய் வழக்கில் கைது... நெஞ்சில் ஈரம் இருக்கா முதல்வரே?... சீமான் கண்டனம்...!
திமுகவின் மணல் திருட்டுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது பொய் வழக்கு தொடரப்பட்டிருப்பதாக சீமான் தெரிவித்தார்.
திமுகவின் இளைஞர் அணி மண்டல மாநாட்டிற்காக சரளை மண் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய உழவர் உரிமை இயக்கத்தின் தலைவர் அருள் ஆறுமுகம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருவண்ணாமலை மேற்கு மாவட்ட அவை தலைவர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட 22 விவசாயிகள் மீது பொய்வழக்கில் கைது செய்து திமுக அரசு சிறையில் அடைத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தன்னுடைய தவறுகளை மூடி மறைக்க ஆட்சி அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, அடக்குமுறையை ஏவி மண்ணையும், மண்ணின் வளங்களையும் காக்கப் போராடும் வேளாண்பெருங்குடி மக்களை சிறைப்படுத்துவது கொடுங்கோன்மை என்று கூறினார்.
திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்ற இடத்தை சமப்படுத்துவதற்காக திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட மலப்பம்பாடி ஏரியிலிருந்து 2,000லோடு சரளை மண் சட்டவிரோதமாகத் திருடப்பட்டு, திமுகவினருக்கு சொந்தமான அருணாச்சலேஸ்வரா சர்க்கரை ஆலை வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்டது என்று கூறினார். மேலும் அனுமதியின்றி ஏரிக்கரையில் 30அடி தார் சாலையும் அமைக்கப்பட்டது என்றும் இம்முறைகேடுகளை எதிர்த்து உழவர் உரிமை இயக்கம் சார்பாக அருள் ஆறுமுகம் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலருக்கு மனு கொடுத்தும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியும் குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
திமுகவின் திருட்டுத்தனத்தைத் தோலுரிக்கும் அப்போராட்டத்தை முடக்கும் நோக்கத்துடன், முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் திமுக அரசு காவல்துறையை ஏவி உழவர் உரிமை இயக்கத்தின் தலைவர் அருள் ஆறுமுகம் உள்ளிட்ட 22 விவசாயிகளின் அலைபேசியைப் பறித்துக்கொண்டு, அதிகாலையிலேயே கைது செய்து போளூர் காவல் நிலையத்தில் அடைத்ததாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வெட்கக்கேடு, அவமானம்... விளம்பரம் தேவையா முதல்வரே? பள்ளி மாணவன் உயிரிழப்புக்கு நீதி கேட்ட சீமான்...!
பொய் புகாரின் பேரில் வழக்கு பதிந்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தற்போது 22 விவசாயிகளையும் வேலூர் சிறையில் அடைத்திருப்பதாகவும் கடும் எதிர்ப்பிற்கு அஞ்சி 6 பேர் மீதான குண்டர் சட்டத்தைத் திரும்பப்பெற்ற போதும், அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்டத்தை மட்டும் திரும்பப்பெற மறுத்தது என்றும் கூறினார். நெஞ்சில் ஈரம் இருந்தால் போதும் என்று பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அருள் ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தில் அடைக்கும்போது உங்கள் நெஞ்சின் ஈரம் எங்கே போனது என்று கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு அரசு மண்ணின் வளங்களைக் காக்கப் போராடிய அருள் ஆறுமுகம் உள்ளிட்ட 22 விவசாயிகள் மீதான பொய் வழக்கை உடனடியாகத் திரும்பப்பெற்று,அனைவரையும் எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: சீமானுக்கு விஜய் வைக்கும் செக்! விஜபி அந்தஸ்து பெரும் காரைக்குடி! காங். - பாஜக பலபரீட்சை!