நெடுஞ்சாலைக்கு நிலம் வழங்கிய நெடும்பரம் மக்கள்... ஏமாத்தாதீங்க..! சீமான் வலியுறுத்தல்..!
படித்த மக்களுக்கு ஒரு நீதி., பாமரர்களுக்கு ஒரு நீதியா என சீமான் கேள்வி எழுப்பினார்.
நெடும்பரம் கிராம மக்கள் நெடுஞ்சாலையை கடக்க சுரங்க வழிப்பாதை அமைத்து தருவதோடு, நெடுஞ்சாலைக்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். நெடுஞ்சாலை அமைப்பதற்காக திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே நெடும்பரம் கிராம மக்களிடம் வலுக்கட்டாயமாக நிலங்களைப் பறித்த தமிழ்நாடு அரசு அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது என சீமான் தெரிவித்தார்.
அதுமட்டுமன்றி நெடுஞ்சாலையைக் கடப்பதற்கு சுரங்க வழிப்பாதை அமைத்துத் தராமல், பள்ளி கல்லூரி செல்லும் 300 மாணவ மாணவியர் உள்பட நெடும்பரம் கிராமத்தில் வாழும் 2000 மக்கள் 5 கி.மீ சுற்றிச் செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளது பெருங்கொடுமை என்று கூறினார். ஆட்சியாளர்களிடம் நெடுஞ்சாலைக்காகத் தங்களின் நிலங்களை இழந்துவிட்டு, அதற்கு தண்டனையாக தினமும் 5 கி.மீ சுற்றிச் செல்லும் நிலைக்கு நெடும்பரம் மக்களை ஆளாக்கி இருப்பதுதான் வளர்ச்சியா என்றும் பெருநகரங்கள் வழியே செல்லும் நெடுஞ்சாலைகளில், இதுபோன்று பாதை அமைத்துத் தராமல் நெடுஞ்சாலையை சுற்றிச் செல்லுமாறு அரசு கூறிவிட முடியுமா எனவும் சீமான் கேட்டார்.
படித்த மக்களுக்கு ஒரு நீதி. பாமர மக்களுக்கு வேறு நீதியா என்றும் குரலற்ற எளிய மக்கள் என்றால் அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்காதா., அவர்களின் உரிமைக்குரல் அரசின் செவிகளில் விழாதா., எல்லோரும் இந்த நாட்டு குடிமக்கள்தானே., அவர்கள் வரி செலுத்தவில்லையா அல்லது வாக்கு செலுத்தவில்லையா., அவர்களின் நியாயமான கோரிக்கையை திமுக அரசு ஏற்க மறுப்பது ஏன் என சரமாரி கேள்விகளை சீமான் முன் வைத்தார். தங்களின் நியாயமான உரிமைக்காகப் போராடிய மக்களைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து அலைக்கழிப்பதும், காவல்துறையை ஏவி மிரட்டுவதற்கும் பெயர்தான் திராவிட மாடலா என்ற கேள்வி எழுகிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கர்நாடக கொடியை அகற்றச் சொல்லி தாக்குதல்...! இந்தக் கோபம் திராவிட கட்சிகள் மேல வரணும்... சீமான் கண்டனம்..!
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைக்கு நிலம் வழங்கிய நெடும்பரம் கிராம மக்களை இனியும் ஏமாற்றாமல், உடனடியாக நெடுஞ்சாலையை கடக்க சுரங்க வழிப்பாதை அமைத்துத் தருவதோடு, நெடுஞ்சாலைக்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டுமென வலியுறுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: ஆண்களுக்கும் இலவச பயணமா? ஏற்கனவே மகளிரை அசிங்கப்படுத்தியது போதாதா? கொந்தளித்த சீமான்..!