வந்தே மாதரத்தை எதிர்க்காதது ஏன்.? அத்துமீறும் மத்திய அரசு... அமைதி காக்கும் தவெக.. சீமான் காட்டம்..!!
வந்தே மாதரம் பாடல் விவகாரத்தில் சீமான் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
மதச்சார்பின்மைக்கு எதிரான வந்தே மாதரம்’ பாடலை அரசு விழாக்களில் கட்டாயமாக்குவதா எனவும் மத்திய அரசின் எதேச்சதிகாரப் போக்கைக் கண்டிக்காது தவெக அரசு அமைதி காப்பதா எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
அரசின் நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயமாகப் பாடப்பட வேண்டுமென மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் இது மதச்சார்பின்மையை அடிநாதமாகக் கொண்டு, பன்மைத்துவத்தை நாட்டின் அடையாளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது. அதனை கண்டிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.
கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய, ‘ஜன கண மன’ எனும் பாடல் நாட்டுப்பண்ணாக இருக்கையில், பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ‘வந்தே மாதரம்’ பாடலை மத்திய உள்துறை அமைச்சகம் வலியத் திணித்துப் பாடக் கோருவது தேவையற்ற சிக்கலை உருவாக்குவதாகும் என்றார்.
இதையும் படிங்க: மதுக்கடைக்கு எதிராக போராடிய மாணவிகள்..! கண்மூடித்தனமாக தாக்குதல்... கொந்தளித்த சீமான்..!!
ஆளும் பாஜக அரசின் இத்தகைய எதேச்சதிகாரப்போக்கு நடவடிக்கைக்கு தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட பதிவுசெய்யாது அமைதிகாப்பது ஏமாற்றம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார். மத்திய ஆளும் பாஜக அரசு, ‘வந்தே மாதரம்’ எனும் மதச்சார்புக் கொண்டப் பாடலை அரசு நிகழ்வுகளில் கட்டாயமாக்கும் முடிவைப் பின்வாங்க வேண்டுமெனவும், அதனைச் செய்யக்கோரி தவெக அரசு எதிர்ப்புத் தெரிவித்து, அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகம் கேள்விக்குறி..! துரோகம் பண்ணிட்டீங்க... தவெகவை பந்தாடிய சீமான்..!