×
 

போராடும் செவிலியர்கள்.. ஒடுக்கும் காவல்துறை... இதெல்லாம் நியாயமா? சீமான் கண்டனம்..!

தேர்தல் அறிக்கையில் அளித்த பணிநிரந்தர வாக்குறுதியை நிறைவேற்றாமல், போராடும் செவிலியர்களை திமுக அரசு காவல்துறை மூலம் அடக்கி ஒடுக்குவது கொடுங்கோன்மை என சீமான் தெரிவித்துள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யாமலும், அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமலும் தமிழ்நாடு அரசு காலம் கடத்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பேரிடர் காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தன்னலமற்று சேவையாற்றிய செவிலியர்களின் உழைப்பினை உறிஞ்சிவிட்டு, உரிமையை தர மறுப்பதோடு, வீதியில் இறங்கிப் போராடும் செவிலியர்களை திமுக அரசு காவல்துறை மூலம் அடக்கி ஒடுக்குவது சிறிதும் இரக்கமற்ற கொடுங்கோன்மை என்றும் கூறினார். 

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் தேர்வாணையத்தின் மூலம் பணி நிரந்தர உறுதிமொழியுடன் 2014-15 ஆம் ஆண்டுகளிலும் , கொரோனா நோய்த்தொற்றுப் பேரிடர் காலத்திலும் ஏறத்தாழ 11000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் முந்தைய அதிமுக அரசால் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டதாகவும் இரவு-பகல் பாராது மக்களின் இன்னுயிர் காக்கும் அரும்பணியில் அயராது ஈடுபட்டு வந்த செவிலியர்கள், அரசு உறுதியளித்தபடி தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டி கடந்த மூன்று ஆண்டிற்கும் மேலாகப் போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

 தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி செவிலியர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்யாமல் ஏமாற்றியதோடு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது அப்பட்டமான தொழிலாளர் விரோதப்போக்கு என்றும் அதுமட்டுமின்றி கொரோனா காலத்தில் தொகுப்பூதியத்தில் சேர்க்கப்பட்ட செவிலியர்களை கடந்த 2023 ஆம் ஆண்டு எவ்வித மனச்சாட்சியும் இன்றி திமுக அரசு பணி நீக்கமும் செய்தது எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: சொல்லுப்பா விஜய்..! நாடாளுமன்றத் தேர்தலில் களத்துக்கு வராதது ஏன்? சீமான் சாரமாரி கேள்வி...!

வாக்குறுதியை நிறைவேற்றாமல், கடந்த 6 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் செவிலியர்களை காவல்துறை மூலம் அடக்கி ஒடுக்குவது எவ்வகையில் நியாயம் என்றும் சீமான் கேட்டுள்ளார். இதுதான் கொடுத்த வாக்குறுதிகளில் 90 விழுக்காட்டை திமுக அரசு நிறைவேற்றிய முறையா என்றும் கொரோனா காலத்தில் தமிழ்நாடு அரசுக்கு தேவதைகளாக தெரிந்த செவிலியர்கள் இன்றைக்கு தேவை இல்லாதவர்களாகிவிட்டனரா எனவும் கேட்டார்.

தமிழ்நாடு முழுவதுமுள்ள 8,322 ஒப்பந்த செவிலியர்களை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணிநிரந்தரம் செய்வதோடு, காலியாகவுள்ள செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், தேவைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்குதல், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, வெளிப்படையான பணியிடமாற்ற கலந்தாய்வு, வரையறுக்கப்பட்ட பணி நேரத்தை உறுதி செய்தல், தேவையற்ற பணிச்சுமையைத் திணிப்பதைத் தவிர்த்தல், உயர்த்தப்பட்ட ஊதியத்தை அனைத்து செவிலியர்களுக்கும் வழங்குதல், கொரானா காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களை மீண்டும் பணியில் சேர்த்தல் உள்ளிட்ட செவிலியர்களின் மிக நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: அடக்குமுறையை கட்டவிழ்க்கும் திமுக... குப்பை கிடங்கை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு சீமான் ஆதரவு குரல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share