அதிகாரம் நிரந்தரம் இல்ல.. ஆடாத ! முன்னாடி அப்பாவிகள்.. இப்போ பயங்கரவாதிகளா? சீமான் காட்டம்..!
வாக்கு கேட்கும் போது அப்பாவி சிறைவாசிகளாக தெரிந்தவர்கள் தற்போது பயங்கரவாதிகளா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டில் தமிழ் தேசியவாத அரசியலை முன்னெடுக்கும் சீமான் தமிழர்களின் உரிமைகள், சமூக நீதி, மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசி வருகிறார். இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை தொடர்பாக அவர் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டனங்களை வெளியிட்டிருந்தார், குறிப்பாக 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளின் விடுதலை தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தங்களுக்கு வாக்களித்து இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கூறியதாகவும் ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டையும் சீமான் தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் இஸ்லாமிய சிறைவாசிகளின் நிலை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஒருவர் திருந்தி வாழ்வதற்கு வாய்ப்பு அளித்து, செய்த தவறை திருத்திக் கொள்வதற்காக தான் சிறை என்றும் உள்ளே வைத்து கொல்வதற்கு அல்ல என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எது மத்திய அரசு, எது மாநில அரசுனு கூட வித்தியாசம் தெரியல.. அதிமுகவை விளாசிய கனிமொழி..!
உலகத்திலேயே வலிமையான ஆயுதம் கண்ணீர் என்று தெரிவித்த அவர், தாய்மார்கள் சிந்தும் கண்ணீர் ஒருநாள் இந்த ஆட்சியை அதல பாதாளத்தில் கொண்டு போய் நிறுத்தும் என்றும் கூறினார். அப்பாவி இஸ்லாமிய சிறை கைதிகளை விடுவிக்க எனக்கு அதிகாரம் தாருங்கள் என்று ஸ்டாலின் கேட்டார் என்றும் வாக்கு கேட்கும் போது நாங்கள் அப்பாவி சிறைகாசிகள்., ஆட்சிக்கு வந்து விட்டால், வெற்றி பெற்றுவிட்டால் நாங்கள் பயங்கரவாதிகளா என்ற கேள்வி எழுப்பினார். உடல்நிலை சரியில்லாத இசுலாமிய சிறைவாசிகளை விடுவிக்க நீதிமன்றமே கூறிய நிலையிலும் 25 வருடங்களுக்கு முன்னால் இருந்த அதே எண்ணத்தில் தான் அவர்கள் இருப்பதாக தமிழக அரசு மனு தாக்கல் செய்வதாக கூறினார்.
எங்களுக்கு இருக்கும் ஒரே வழி போராட்டம் தான் என்றும் போராடி சாதிக்க வேண்டும் என்ற நிலையில் இருப்பதாகவும் இஸ்லாமிய சிறைவாசிகள் மீதான தாக்குதல் முறையான போக்கு அல்ல என்றும் கூறினார். இஸ்லாமிய சிறைவாசிகளுக்காக ஆகஸ்ட் முதல் வாரத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறிய அவர், இன்று நீங்கள் அதிகாரத்தில் இருக்கிறீர்கள் நாங்கள் முச்சந்தியில் இருக்கிறோம்., அதேபோல ஒரு நாள் நாங்கள் அதிகாரத்தில் இருப்போம்., நீங்கள் முச்சந்தியில் இருப்பீர்கள் என தெரிவித்தார் .
அதிகாரம் நிரந்தரம் என நினைத்து ஆடாதீர்கள். அது நீண்ட நாள் நிலைக்காது என்றும் உண்மை ஊமையாக இருக்கும் உறங்கும்., ஆனால் செத்துப்போகாது என கூறினார். மேலும் எல்லா சிறைவாசிகளுக்கும் கொடுக்கும் நடைமுறையை யாவது இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் அவர்களது குடும்பத்தினரோடு பேச அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: அடுத்த ஸ்கெட்ச் திருவாரூர் மாவட்டத்திற்கா? நாளை கள ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!