நான் வரேன்..! களமிறங்கும் சீமான்..! பல்கலைக்கழக ஆசிரியர் போராட்டத்திற்கு ஆதரவு!
தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த வரைவு 2025ற்கு எதிரான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் போராட்டத்தினை மதித்து திரும்பப் பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசின் உயர் கல்வித் துறை அறிமுகப்படுத்தியுள்ள தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த வரைவு 2025னை எதிர்த்து சென்னை எழும்பூர் இராசரத்தினம் அரங்கம் அருகே பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மாபெரும் போராட்டத்தினை அறிவித்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் முதன்மையான நோக்கம், தற்போது அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு வழிவகை செய்வதாகும். 2008ஆம் ஆண்டில் தனியார் பல்கலைக்கழகச் சட்ட வரைவு அறிமுகப்படுத்தப்பட்டபோது இதே முயற்சி மேற்கொள்ளப்பட்டு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த சட்ட முன்னெடுப்பினை தமிழ்நாடு அரசு மேற்கொள்வது கடும் கண்டனத்திற்கு உரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தின் படி ஏறக்குறைய 163 உதவி பெறும் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகங்களாக மாறும் அபாயம் உள்ளது என்று குறிப்பிட்டார். உதவி பெறும் கல்லூரிகள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மற்றும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்த செலவில் தரமான கல்வியைப் பெறும் வாய்ப்பு உள்ளது என்றும் ஆனால், இந்தச் சட்டத்தின் வழியே கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டால், அவை அரசின் எந்தவித தலையீடும் இல்லாமல் தனி நபர் வருவாய் ஈட்டும் தொழிலாக மாறிவிடும் என தெரிவித்தார். குறிப்பாக, கல்வி நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தி பெறக்கூடிய நிலை ஏற்படும்., இதனால், தற்போதுள்ள உரிமைகளைப் பெறும் ஏழை மற்றும் எளிய சமூகப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு முழுவதுமாக மறுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
தனியார் பல்கலைக்கழகங்களாக மாறிவிட்டால், இடஒதுக்கீடு முறையைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் இது சமூக நீதிக் கொள்கைகளை நீர்த்துப்போகச் செய்து, இப்போது இருக்கும் நிலையை மேலும் குலைத்துவிடும் என்றும் இந்தச் செயல்பாடு உயர்கல்வியின் தரத்தை சீர்குலைத்து, வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே பயன்படும் வகையில் மாற்றிவிடும் எனவும் கூறினார். ஏழை மாணவர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடலா என்றும் நாட்டின் எதிர்கால தலைமுறையினருக்கு அடிப்படையாக வழங்க வேண்டிய கல்வியை கூட அரசு முழுமையாக வழங்க முடியாதது தான் குறை சொல்ல முடியாத ஆட்சியா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: " இன்னைக்கு ஒரு புடி ..." - சீமான் பிறந்தநாள் ... தம்பிகளுக்கு 18 வகை உணவுடன் தடபுடல் விருந்து ...!
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்ப்பின் காரணமாக இந்த சட்ட வரைவு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் அவர்களின் கோரிக்கையை முழுமையாக ஏற்று தமிழ்நாடு அரசு இந்த தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த வரைவு 2025ஐ நிபந்தனையற்றுத் திரும்பப் பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இன்றைய போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தான் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாசமா போச்சு... கோவில் நகரத்தை குப்பை மேடாக்கியதுதான் திமுக சாதனை..! சீமான் விமர்சனம்