ஏசப்பா மீது ஆணையாக… தெளிவா சொல்லிட்டாரு சீமான்! இனிமே இதான் ரூட்…!
இனிவரும் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என சீமான் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழக அரசியலின் கடந்த பத்தாண்டுகளில் திமுக, அதிமுக, பாஜக போன்றவை கூட்டணிகளைத் துணைக்கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தனது கட்சியின் கொள்கை உறுதியை வலியுறுத்தி, 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இது அவரது கட்சியின் ஐந்தாவது தொடர்ச்சியான தனித்துப் போட்டி முடிவு.
கூட்டணி இல்லை, சமரசமில்லை என்ற அவரது உறுதிமொழி இக்கட்சியின் அடையாளத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த அறிவிப்பு, தமிழக இளைஞர்கள் மற்றும் சமூகநீதியை எதிர்பார்க்கும் பிரிவுகளிடையே பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. சீமானின் அரசியல் பயணம், 2010இல் நாம் தமிழர் இயக்கத்திலிருந்து தொடங்கி, 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டதன் மூலம் உருவெடுத்தது.
அப்போது 1.1 சதவீத வாக்குகளைப் பெற்ற கட்சி, 2021இல் 8.2 சதவீதமாக உயர்ந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு, 36 லட்சம் வாக்குகளைப் பெற்றது. இந்த வளர்ச்சி, கூட்டணிகளின் அழுத்தத்தைத் தாண்டி, கொள்கை அடிப்படையில் நிலைத்து நிற்கும் தீர்மானத்தின் விளைவு என்கிறார் சீமான்.
இதையும் படிங்க: BJP ஹிந்துத்துவா… காங்கிரஸ் SOFT ஹிந்துத்துவா! அவ்வளவுதான் வித்தியாசம்… தோலுரித்த சீமான்…!
இந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தல் 2029 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் நிற்போம் என்றும் தனித்துவமாக நிற்போம் எனவும் சீமான் கூறி உள்ளார்.பாஜக அல்ல எந்த கட்சி உடனும் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்காது என்றும் எனக்கு மும்மொழியும் இல்லை, இருமொழியும் இல்லை, ஒரே மொழி தாய் மொழி தான் என தெரிவித்தார். அரசியல் என்பது மக்கள் மீது அதிகாரம் செலுத்துவது அல்ல என்றும் ஏசுவின் மீது ஆணையாக திராவிட கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்த சீமான், 15 ஆண்டுகளாக எவ்வளவு நெருக்கடியை சந்தித்து இருக்கிறேன்., நெருக்கடியின் போதே கூட்டணி வைத்திருக்க மாட்டேனா என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: காசா மக்களுக்காக கண்ணீர்... எல்லாத்துக்கும் பதவி சுகம் தான் காரணம்! விளாசிய சீமான்...!