அண்ணா,பெரியாரை விமர்சித்து வீடியோ.. அடிமை சாசனம் எழுதி கொடுத்த அதிமுக! சேகர்பாபு கடும் விமர்சனம்..!
பாஜகவுக்கு அதிமுக அடிமை சாசனம் எழுதிவிட்டதாக அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரையில் நேற்று இந்து முன்னணி சார்பில் மிக பிரம்மாண்டமாக முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கலந்து கொண்டார். நைனா நாகேந்திரன், அண்ணாமலை, எச். ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், உட்பட ஏராளமான மூத்த பாஜக நிர்வாகிகளும் அதிமுக அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பேசியவர்கள் ஹிந்து, ஹிந்துக்கள் என்றும் அரேபிய மதம் என்ற குறிப்பிடும், திராவிடத்தை பற்றியும், இந்து சமய அறநிலையத்துறை குறித்தும் பல்வேறு விமர்சனங்களையும் முன் வைத்தனர். குறிப்பாக எந்த மாநாட்டில் ஆறு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர். திருப்பரங்குன்றம் தீப தூணில் வருகின்ற கார்த்திகையில் தீபம் ஏற்ற வேண்டும், இந்து பெண்களின் குங்குமத்தை வைத்து சிந்தூர் ஆபரேசன் திட்டத்தை நிறைவேற்றிய பிரதமருக்கு நன்றி, திருப்பரங்குன்றம் மலையை காக்க, குன்றம் குமரனுக்கே, இந்து கோவில்களில் இருந்து இந்துசமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும், இந்துக்களின் வாக்கு வங்கியை ஒற்றுமையாக காக்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் சஷ்டி அன்று கந்த சஷ்டி கவசத்தை பாட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: பவன் கல்யாண் வருவதை எதிர்க்கலாமா? மீரு எவரண்டி.. பதில் செப்பண்டி.. H.ராஜா தடாலடி..!
இந்த நிலையில், முருக பக்தர்கள் மாநாட்டை அண்ணா, பெரியார் தொடர்பான வீடியோக்கள் வெளியிடபட்டதாக அமைச்சர் சேகர் பாபு கண்டனம் தெரிவித்தார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கோவில்களை கொடியவர்களின் கூடாரமாக்க துடிக்கிறார்கள் என்றும் நாங்கள் ஆன்மீகவாதிகளின் இடமாக மாற்ற விரும்புகிறோம் எனவும் கூறினார். அதிமுக எப்படி தன்னை அடிமைப்படுத்திக் கொள்கிறது என்பதற்கு இதுவே உதாரணம் என்றும் இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாடு என்பது அரசியல் மாநாடு என்றும் கூறினார்.
இந்து சமய அறநிலையத்துறை குறித்து இந்து முன்னணியின் தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு, இந்து முன்னணி மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்து விமர்சனம் செய்து வீடியோ வெளியிடப்பட்டதாகவும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் கட்சியின் கொள்கை தலைவர்களை விமர்சித்த வீடியோவை அவர்கள் பார்த்துகொண்டு இருந்ததாகவும் தெரிவித்தார். திராவிடத்தை அழிப்போம் என சூளுரைத்த எச். ராஜா அதே மேடையில் தான் இருந்தார் என்றும் பெரியார், அண்ணா, ஜெயலலிதா குறித்து அதிகமாக வசைபாடிய அண்ணாமலையுடன் அதிமுகவினர் மேடையில் அமர்ந்திருந்ததாகவும் கூறினார்.
இதையும் படிங்க: விஜய் பச்சாவா.? அப்போ உதயநிதி சோட்டா பச்சா.. துரைமுருகனுக்கு தவெக ஹாட்டான பதில்!