"கயத்தாறு ஆணவக் கொலை"..! "சாதிக்காக இப்படியா..? கொந்தளித்த செல்வப்பெருந்தகை..!
கயத்தாறு ஆணவக் கொலை சம்பவத்திற்கு செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் காதல் விவகாரத்தில் இளம்பெண் ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்தார் என்பதற்காக அபிசெல்வி என்ற இளம் பெண், அவரது அண்ணன் சிவஞானம் மற்றும் தாய் எஸ்தர் பாலின் ஆகியோரால் திட்டமிட்டு ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்றார்.
இக்கொடூரத்தை மறைக்க, அந்தப் பெண் 'விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்' என நாடகமாடி, உடலை அவசர அவசரமாக இறுதி சடங்கு செய்ய முயன்ற குடும்பத்தினரின் செயல், சாதி வெறி மனிதநேயத்தை எவ்வளவு தூரம் மரத்துப் போகச் செய்யும் என்பதற்குச் சான்று என்றார். காவல்துறையின் துரித விசாரணையால் உண்மை வெளிச்சத்திற்கு வந்து, குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது ஆறுதல் அளித்தாலும், இதுபோன்ற சாதியப் படுகொலைகளுக்கு என்றுதான் முற்றுப்புள்ளி வைக்கப்படப் போகிறது என்ற கேள்வி எழுகிறது என கூறினார்.
கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் மிகக் கடுமையான, முன்மாதிரியான தண்டனை விரைந்து பெற்றுத்தரப்பட வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் இதுபோன்ற ஆணவப் படுகொலைகளைத் தடுக்க 'தனிச் சிறப்புச் சட்டம்' உடனடியாக இயற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மக்கள் மீது கூடுதல் சுமை.. உடனே திரும்பப் பெறுக..!! கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!!
மாற்றுச் சமூகத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியருக்குப் பாதுகாப்பு வழங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்புப் பிரிவுகள் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்றும் சொந்த மகளின், தங்கையின் உயிரை விட சாதிப் பெருமைதான் பெரிது என நினைக்கும் இந்த பிற்போக்குச் சிந்தனை ஒழிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். சாதி மறுப்புக் காதல் மற்றும் திருமணங்களைச் சமூக ரீதியாகக் கொண்டாடுவதும், பாதுகாப்பதுமே இதற்கு நிரந்தரத் தீர்வு என்றும் சாதியற்ற, சமத்துவச் சமுதாயத்தை நோக்கி நாம் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாணிக்கம் தாகூர் Vsபிரவீன் சக்கரவர்த்தி! தமிழக காங்., தலைவர் பதவிக்கு கடும் மோதல்!