வன்முறை தீர்வா? MP அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு… செல்வப் பெருந்தகை கண்டனம்..!!
நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் கொண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு செல்வப் பெருந்தகை கண்டனம் கூறினார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்தார். காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மண்ணெண்ணெய் குண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடி உள்ளனர். சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். தடயங்களை சேகரித்து மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் எம்.பி. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது, ஜனநாயகத்திற்கு எதிரானது என செல்வப் பெருந்தகை கூறியுள்ளார். இந்த வன்முறைச் சம்பவத்துக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: எடப்பாடியோட எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியும் காலி... அதிமுக - பாஜக கூட்டணியை எகிறி அடித்த செல்வப்பெருந்தகை...!
அரசியல் கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், அதனை வன்முறை மூலம் வெளிப்படுத்துவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் இப்படிப்பட்ட தாக்குதல்கள் சட்டம்-ஒழுங்கை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், ஜனநாயக அரசியல் மரபுகளையும் பாதிக்கக்கூடியவை எனவும் கூறியுள்ளார். இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை காவல்துறை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்து, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வப் பெருந்தகை வலியுறுத்தினார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் அரசு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் கன்ஃபார்ம்..!! ஸ்டாலினே சொல்லிட்டாரு... செல்வப் பெருந்தகை பேட்டி..!!