திமுகவை சீண்டும் மாணிக்கம் தாகூர்... அவசரகதியில் டெல்லிக்குச் செல்லும் செல்வப் பெருந்தகை..!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்ல பெருந்தகை இன்று அவசர அவசரமாக டெல்லிக்கு செல்கிறார்.
தமிழ்நாட்டில் திமுகவும் காங்கிரஸும் இணைந்து நடத்தி வரும் கூட்டணி இப்போது சற்று சலசலப்புக்கு ஆளாகியிருக்கிறது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர் திமுக குறித்து தொடர்ந்து கடுமையான கருத்துகளை வெளியிட்டு வருவது இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணமாக உள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு போன்ற விஷயங்கள் விவாதமாக இருக்கும் நிலையில், இந்தப் பேச்சுகள் கூட்டணியின் உறவில் விரிசலை ஏற்படுத்தியிருக்கின்றன.
மாணிக்கம் தாகூர் மதுரையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பேசியபோது, திமுக தரப்பில் இருந்து வரும் சில கருத்துகள் காங்கிரஸ் தொண்டர்களை மிகவும் வலியுறுத்துவதாகவும், அவர்களை அவமதிப்பதாகவும் உணர்வதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் எம்எல்ஏ தளபதி போன்றோர் காங்கிரஸ் கட்சியின் பலம் குறித்து விமர்சித்தபோது எழுந்த கோபத்தை அவர் வெளிப்படுத்தினார்.
ஆட்சியில் அதிகார பகிர்வு அவசியம் என்றும், அது காங்கிரஸின் உரிமை என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 2021 தேர்தலில் திமுக தோல்வியடைந்த தொகுதிகளைத்தான் காங்கிரஸ் கேட்பதாகவும், திமுக தனித்து 170 தொகுதிகளில் போட்டியிடுவது, 160 இடங்களில் வெல்லும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். ஆட்சி பங்கு எங்கள் உரிமை, மக்கள் தீர்மானிப்பார்கள் என்ற அவரது கருத்து திமுக தலைமையை மறைமுகமாக சீண்டுவதாகவே பார்க்கப்படுகிறது. இந்தத் தொடர் விமர்சனங்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளன.
இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு ஒத்து வராது...! முதல்வர் கருத்தால் கூட்டணிக்குள் பிளவா? செல்வப் பெருந்தகை ஓபன் டாக்...!
மாநில காங்கிரஸ் தலைமை இதுபோன்ற கருத்துகளை வெளிப்படையாக ஆதரிப்பதில்லை என்றாலும், மாணிக்கம் தாகூரின் பேச்சு கட்சியின் உள் அமைப்பில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை இன்று அவசர அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். இன்று பிற்பகல் டெல்லிக்கு புறப்படும் செல்வ பெருந்தகை காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மாணிக்கம் தாக்கூரின் சர்ச்சை பேச்சுகள் உள்ளிட்டவை தொடர்பாக எடுத்துரைக்க அவர் டெல்லிக்கு செல்ல இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராமதாஸ் - விசிக பற்றி செல்வப் பெருந்தகை பேசினாரா? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டனம்..!