செல்வப்பெருந்தகை எனக்கு அண்ணன் போன்றவர்... காங்கிரஸ் உட்கட்சி மோதலுக்கு மாணிக்கம் தாகூர் முற்றுப்புள்ளி!
2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கை குறித்து ஏற்கனவே கடந்த 17-ஆம் தேதியே காங்கிரஸ் மேலிடத்திடம் பேசிவிட்டதாக அவர் உறுதிப்படுத்தினார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் கூட்டணி குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அதிரடியாகப் பதிலளித்தார்
ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை குறித்து ஏற்கனவே கடந்த 17-ஆம் தேதி காங்கிரஸ் தலைமையிடம் பேசிவிட்டதாக மாணிக்கம் தாகூர் உறுதிப்படுத்தினார். இந்தக் கோரிக்கை குறித்து ராகுல் காந்தியின் கருத்து என்ன என்பதைச் செய்தியாளர்கள் அவரிடமே தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் எனக்கும் இடையிலான உறவு அண்ணன் - தம்பி போன்றது. எங்களுக்குள் பெரிய பிரச்சனைகள் ஏதுமில்லை. செல்வப்பெருந்தகை என் மீது புகார் அளிக்கப் போவதாக வந்த தகவல்களில் உண்மை இல்லை; இதனைச் செய்தியாளர்கள் பெரிதாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ராகுல் காந்தி தலைமையில், கார்கேவை தலைவராக ஏற்று கட்சியைப் பலப்படுத்துவதே எனது முயற்சி எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “மரியாதை இல்லை என்றால் திருப்பி அடிப்போம்!” திமுகவை சரமாரியாகக் கேள்வி கேட்ட மாணிக்கம் தாகூர் எம்பி!
பெண்களை அவதூறாகப் பேசுதல்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால், அதே 'வியாதி' பாஜக மாவட்டத் தலைவர்களுக்கும் ஒட்டியுள்ளது. கரூர் எம்.பி ஜோதிமணி குறித்து அவதூறாகப் பேசிய பாஜக நிர்வாகி மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்துப் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பெண்களை அசிங்கமாகப் பேசுவது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கலாச்சாரமாக மாறிவிட்டது என அவர் விமர்சித்தார்.
மாணிக்கம் தாகூர் ராஜினாமா என பரவும் தகவல்கள் அற்பமான ஐடி விங் வேலைகள்; கற்பனைக்கு எல்லையே இல்லாமல் வதந்திகளைப் பரப்புகிறார்கள் எனச் சாடினார்.
இதையும் படிங்க: “விவசாயிகளை அமெரிக்காவிடம் விற்றுவிட்டார் மோடி!” எம்பி மாணிக்கம் தாகூர் கடும் குற்றச்சாட்டு!