×
 

டெல்லியில நடக்குறது விசாரணையா? இல்ல டீலா? பாஜக-விடம் விஜய் சரணாகதி? காங்கிரஸ் கிளப்பும் புதுப் புகார்!

விஜய்யை டெல்லிக்கு அழைத்து பாஜக 'அரசியல் டீல்' போடுவதாகக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், சிங்கம் வாயில் மாட்டிக்கொண்ட கதையாகச் சிபிஐ (CBI) வலையில் சிக்கியிருக்கிறார்; டெல்லிக்கு வரவழைத்து அவரை மிரட்டி அரசியல் மற்றும் தேர்தல் ஒப்பந்தம் போட பாஜக முயற்சிக்கிறது எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை வருகை தரும் ராகுல் காந்தியின் பயண ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக கோவை வந்த செல்வப்பெருந்தகை, விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, விஜய்யின் சிபிஐ விசாரணை, அண்ணாமலையின் விமர்சனங்கள் மற்றும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் நிலவும் சலசலப்புகள் குறித்துத் தனது பாணியில் ‘டாப் கியர்’ பதில்களைத் தட்டிவிட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, "ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரானது நமது தமிழகக் காவல்துறை. கரூர் வழக்கை இங்கேயே விசாரித்திருந்தால் இவ்வளவு சிரமம் இருந்திருக்காது. ஆனால், விஜய்யை டெல்லிக்கு வரவழைத்து, அவரைத் தேர்தல் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்தால் வழக்குகள் மாயமாகிவிடும் என பாஜக பகல் கனவு காண்கிறது. அவர்களின் இந்த முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது" எனச் சாடினார். பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்துப் பேசுகையில், "அவர் அறிவில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்; மகாராஷ்டிரா மற்றும் மும்பையைப் பற்றிப் பேசும் அவர், தமிழகத்தைப் பற்றி ஒருபோதும் அறிவுப்பூர்வமாகவோ, நாகரிகமாகவோ பேசுவதில்லை" என விமர்சித்தார்.

இதையும் படிங்க: "6 மணி நேர விசாரணை நிறைவு!" சிபிஐ அலுவலகத்திலிருந்து வெளியே வந்த விஜய்! நாளையும் ஆஜராக உத்தரவு!

கூட்டணி விவகாரம் குறித்துப் பேசிய அவர், "இந்தியா கூட்டணி எஃகு கோட்டையாக வலிமையாக உள்ளது. திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த மட்டுமே எங்களது அகில இந்தியத் தலைமை குழு அமைத்துள்ளது. வேறு எந்தக் கட்சியுடனும் நாங்கள் கொல்லைப்புற அரசியல் செய்ய மாட்டோம்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். குறிப்பாக, காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுவெளியில் கூட்டணிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், மீறுபவர்கள் மீது அகில இந்தியத் தலைமையுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். "எத்தனை தொகுதிகள் என்பது மைக் முன்னால் பேச வேண்டியதல்ல, அது அறையில் பேசி முடிக்க வேண்டிய விஷயம்" எனத் தொகுதிப் பங்கீடு குறித்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். நாளை கூடலூரில் ராகுல் காந்தி பங்கேற்கும் பள்ளி விழா மற்றும் சமத்துவப் பொங்கல் விழாவில் அரசியல் கலப்பு இருக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.


 

இதையும் படிங்க: "திடீர்னு ஏன் இவ்வளவு பாசம்? திமுக வலையில் விழுந்துடாதீங்க விஜய்!" தமிழிசை கொடுத்த அட்வைஸ்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share