#BREAKING: அதிமுகவில் இருந்து விலகும் செங்கோட்டையன்? பகீர் கிளப்பும் திடீர் முடிவு!
தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மனம் திறந்து பேச இருப்பதாக கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி, 2017 முதல் 2021 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர். 2023 மார்ச் 28 முதல் அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார். அவரது தலைமையின் கீழ், அதிமுக 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தாலும், கட்சியை ஒருங்கிணைத்து, உட்கட்சி பிளவுகளைச் சமாளித்து முன்னோக்கி நகர்த்திய பெருமை அவருக்கு உண்டு. மறுபுறம், கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பல ஆண்டுகளாக அமைச்சராகப் பதவி வகித்தவராகவும், கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். செங்கோட்டையன், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார்.
செங்கோட்டையனின் அதிருப்தி குறித்த பேச்சு, 2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது, எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பாணி மற்றும் கட்சி உள்ளூர் மாவட்ட அரசியலில் அவரது ஆதரவு முடிவு. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணனுக்கு எடப்பாடி ஆதரவு அளித்ததாகக் கூறப்படுவது, இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
அதிமுகவின் முக்கிய கூட்டங்களில் பங்கேற்பதை செங்கோட்டையன் புறக்கணித்து வந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் நடைபெற்ற அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவையும் செங்கோட்டையன் புறக்கணித்தார்.
இதையும் படிங்க: திமுக தொண்டன் கூட இப்படி சில்லிதனமா நடந்துக்க மாட்டார்! ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த அமைச்சர்..!
இருப்பினும் சமீபத்தில் செங்கோட்டையன் கட்சி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கேற்று வந்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையம் அலுவலகத்தில் தான் மனம் திறந்து பேச இருப்பதாக தெரிவித்துள்ளார். என்ன கருத்து சொல்லப் போகிறேன் என்று அப்போது தெரிந்து கொள்ளலாம் அதுவரை பொறுத்திருங்கள் என்று கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருக்கிறார் என்று பரவலாக பேசப்படும் நிலையில் மனம் திறந்து பேச இருப்பதாக செங்கோட்டையன் கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் விலக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்துவார் தவிர, அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் விலக மாட்டார் என நம்புவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி தனது கருத்தை முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: கண்ண மூடிட்டு ஆதரிக்க முடியுமா? அரசியல் ரீதியா அணுகனும்! சிபிஆர் குறித்து TKS இளங்கோவன் பேட்டி..!