×
 

அட்டகத்தி...! தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டு..! அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி..!

தயாநிதி மாறன் மீது குற்றம் சாட்டிய அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பதிவில் ஒரு வீடியோவைப் பகிர்ந்தார். அந்த வீடியோவில் திமுகவின் தயாநிதி மாறன் ஒரு கூட்டத்தில் பேசியதாகக் காட்டப்பட்டது. அதில் கோவை மக்களைப் பற்றி பக்கத்து ஊரைக் கெடுப்பவர்கள் என்று அவமரியாதையாகப் பேசியதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் கூறியது என்னவென்றால், தயாநிதி மாறன் இப்படி இழிவாகப் பேசியதை செந்தில் பாலாஜி சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தார் என்றும், இது கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதி மக்களையும் அவமதிப்பதாகும் என்றும் சாடினார். இதனால் கோவை மக்கள் திமுகவை அடுத்த தேர்தலில் புறக்கணிப்பார்கள் என்று எச்சரித்தார். மேலும், தயாநிதி மாறனுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள் நகைச்சுவையாகப் பேசிய காணொளியை, வெட்டி ஒட்டிப் போட்டு அரசியல் செய்யும் அட்டக்கத்தி, பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்து, ஒன்றிய அரசிடம் கோவைக்கு பெற்றுத் தந்த திட்டங்கள் என்ன என்று செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார். கோவை மெட்ரோ திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசிடம் பெற்றுத் தர எடுத்த முயற்சிகள் என்ன என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். 

இதையும் படிங்க: ஒப்புக்கு சப்பாணி..! ஒரு USE- ம் இல்ல... பட்ஜெட்டை பந்தாடிய அண்ணாமலை..!

கோவை மாவட்ட தொழில் முனைவோர்களை வதைக்கும் ஜி.எஸ்.டி பிரச்சனையில் பங்களிப்பு என்ன என கேட்டுள்ளார். இறக்குமதி வரிகளால் பாதிக்கப்பட்ட கரூர், திருப்பூர் மற்றும் கோவை ஏற்றுமதியாளர்களுக்கு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல், வெறும் வாயில் வடை சுடுவதையும் வெற்று காற்றில் சாட்டை சுழற்றியதையும் கோவை மக்கள் தெரிந்து கொண்டதால் தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வ வைத்தார்கள் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நடிகை த்ரிஷா குறித்த நயினாரின் சர்ச்சை பேச்சு! பிரச்னை இன்றோடு முடிந்தது? அண்ணாமலை விளக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share