100 நாள் வேலை! காந்தி பெயர் மாற்றம்?! காங்., எம்.பிக்கள் தீவிர ஆலோசனை
100 நாள் வேலைத் திட்டம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி (எம்ஜிஎன்ஆா்இஜி) திட்டத்துக்கு மாற்றான புதிய மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
புது டெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) மாற்றி புதிய சட்டம் கொண்டுவரும் 'விக்சித் பாரத் – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி மிஷன் (விபி-ஜி ராம் ஜி)' மசோதா 2025, மக்களவையில் டிசம்பர் 16 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தாக்கல் செய்தார்.
புதிய மசோதாவில், கிராமப்புற குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை உறுதியாக வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி 125 நாட்கள் வேலை உறுதி அளிக்கப்படும். மேலும், நீர் பாதுகாப்பு, கிராமப்புற உள்கட்டமைப்பு, வாழ்வாதார திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், திட்டத்தின் பெயரில் இருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், இதுவரை மத்திய அரசு முழு நிதியும் (ஊதியத்துக்கு 100%, பொருள் செலவுக்கு 75%) வழங்கி வந்த நிலையில், புதிய மசோதாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு 60:40 விகிதத்தில் (மத்திய:மாநில) நிதி பகிர்வு செய்யப்படும் என்ற அம்சத்துக்கும் எதிர்ப்பு எழுந்தது. இது தேவை அடிப்படையிலான (demand-driven) திட்டத்தை பட்ஜெட் அடிப்படையிலான (supply-driven) திட்டமாக மாற்றிவிடும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதையும் படிங்க: மகாத்மா காந்தி என் குடும்பம் கிடையாது!! ஆனாலும்! பார்லி-யில் ப்ரியங்கா காந்தி ஃப்யர் பேச்சு!
மசோதா அறிமுகம் செய்யப்பட்டதும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் மகாத்மா காந்தியின் படங்களை ஏந்தி அவைக்குள் வந்து போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ரா, இந்த மசோதா ஏழைகளின் உரிமையை பலவீனப்படுத்தும் என்று விமர்சித்தார். மசோதாவை நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பி விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.
இதனிடையே, மசோதா குறித்து இரண்டாம் நாளாக விவாதம் நடைபெற்று நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதால், காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும் அவையில் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளார். இன்று காலை காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சி அலுவலகத்தில் எம்பிக்கள் ஆலோசனை நடத்தினர்.
அரசு தரப்பில், இந்த மசோதா 'விக்சித் பாரத் 2047' இலக்குக்கு ஏற்ப ஊரக வளர்ச்சியை மேம்படுத்தும் என்று கூறப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் இதை காந்தியின் மரபை அவமதிப்பதாகவும், ஏழைகளுக்கு எதிரான நடவடிக்கையாகவும் கண்டித்துள்ளன.
இதையும் படிங்க: 100 நாள் இல்லை… இனி 125 நாள்!! பார்லியில் புதிய மசோதா தாக்கல்!! சிறப்பம்சங்கள் என்ன?