என் பேரு எங்கய்யா? வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட முதியவர்...!
வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லாத சோகத்தில் 82 வயது முதியவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் 58 லட்சம் பேர் வரை நீக்கப்பட்டனர். இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லாத சோகத்தில் 82 வயது முதியவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது
இதையும் படிங்க: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா?... இன்றும், நாளையும் இதை கட்டாயம் செய்யுங்க....!
புருலியா மாவட்டத்தைச் சேர்ந்த துர்ஜன் மாஜி என்பவர் சாந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். சமீபத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை என்ற சோகத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ரயிலின் முன்பு குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதால், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டதாகவும் விசாரணைக்குச் செல்ல வாகன வசதி கிடைக்காததாலும், தனது குடியுரிமை மற்றும் வாக்களிக்கும் உரிமை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தாலும் மன உளைச்சலில் இருந்ததாக அவரது மகன் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். SIR ஏழை மக்களைத் துன்புறுத்துவதாகவும், இதுவரை சுமார் 60 பேர் இதனால் உயிரிழந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதை தொடர்ந்து, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளை நேரடி விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: SIR... புதிய வாக்காளர்களுக்கு சிக்கல்.. மாட்டுனா ஜெயில் தானாம்...!