சிவகங்கை கல்குவாரி விபத்து சம்பவம்.. அதிரடி உத்தரவு போட்ட கனிமவளத்துறை..!
சிங்கம்புணரி அருகே தனியார் கல்குவாரி விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளை ஆய்வு செய்ய கனிமவளத்துறை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாங்கோட்டை கிராமத்தில் தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த குவாரியில், அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். சுமார் 450 அடி ஆழம் கொண்ட இந்த குவாரியில் இருந்து வெட்டப்படும் கற்களை கொண்டு எம் சாண்ட் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த தொழிலாளர்கள், கற்களை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே குவாரியில் பாறையை உடைக்க வெடி வைக்கப்பட்டது. பயங்கர சத்தத்துடன் வெடித்ததை அடுத்து அங்கு மண் சரிவு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சாத்தான்குளம் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம்.. நிவாரணம் அறிவித்தார் முதல்வர்..!
இந்த மண் சரிவில் அங்கே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கினர். குறிப்பாக ஹர்ஷித், ஆண்டிச்சாமி, கணேஷ், ஆறுமுகம், முருகானந்தம் ஆகிய 5 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து, குவாரிக்கு முறையான அனுமதி பெறப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறதா? அனைத்து வகையான விதிகளும் பின்பற்றப்பட்டதா? அல்லது சட்டவிரோதமாக இயங்கி வந்ததா என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் குவாரி உரிமையாளர் மேகவர்ணம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே உயிரிழந்த ஹர்ஷித் என்பவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, நிவாரணமும் அறிவித்தார். அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் கல்குவாரி விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில், தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளை ஆய்வு செய்ய கனிமவளத்துறை உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு நடைமுறைகள், விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கல்குவாரியில் தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி... கதறும் குடும்பத்தினர்!