மதுரையில் சோகம்... மண் சரிவில் சிக்கி துடிதுடித்து 2 பெண் தொழிலாளர்கள் மரணம்...!
பின்பாக இருவரும் நீண்ட நேரமாக வரமுடியாத நிலையில் மூச்சு திணறி உயிரிழந்து விட்டனர் என்றார்
மதுரை சிலைமான் அருகே மண்டபம் கட்டும் பணியில் ஈடுபட்ட இரு பெண் தொழிலாளர்கள் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த சோகம். கட்டிட உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை
மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியில் தங்கராசு என்பவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் கட்டும் பணி சில நாட்களாக நடைபெற்றுவந்துள்ளது. மண்டபத்தின் கீழ்த்தளத்திற்காக 20 அடி அளவிற்கு பள்ளம் தோண்டப்பட்டு தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது.
இன்று பணிக்கு வந்த சிவகங்கை மாவட்டம் மணலூர் கிழக்கு சிலைமான் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி(46) என்ற பெண்ணும் சிலைமான் அருகே உள்ள புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த தமிழரசி(60) என்ற மூதாட்டி உள்ளிட்ட தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதையும் படிங்க: காற்றில் பறந்த முதல்வர் விஜய் உத்தரவு... அரசு மருத்துவமனையில் நோயாளி குழந்தையுடன் தாய் கண்ணீர் போராட்டம்...!
தனலட்சுமி மற்றும் தமிழரசி இருவரும் மதிய உணவு முடித்துவிட்டு கட்டிடப் பணியில் ஈடுபடுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகே நடந்து சென்ற போது திடீரென மண் சரிந்து பள்ளத்திற்குள் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது
இருவர் மீதும் மண் விழுந்த மூடிய நிலையில் இருவரும் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிலைமான் காவல்துறையினர் மற்றும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மண்ணை வெளியேற்றி தனலெட்சுமியின் உடலை மீட்டனர்
ஆனால் தமிழரசியின் உடலை மீட்பதில் கடும் சவால் ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் மண்ணை தோண்டி தமிழரசியின் உடலை கயிறுமூலமாக கட்டி மீட்டனர்.
தமிழரசியின் மகள் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் தனது தாயாரின் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மண் சரிவில் சிக்கி உயிரிழந்த இரு பெண் தொழிலாளர்களின் உடல் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராயவிற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
விபத்துக்கான காரணம் உள்ளிட்டவைகள் குறித்து சிலைமான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மதுரையில் மண்டபம் கட்டுமான பணியின்போது மண் சரிவில் சிக்கி இரு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவத்தை நேரில் பார்த்த செவனாயி என்ற பெண் தொழிலாளர் பேசும்போது, நாங்கள் மூன்று பேரும் உணவு அருந்திவிட்டு நான் வெளியில் பணி செய்து கொண்டிருந்த போது இவர்கள் பள்ளத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மண் சரிந்து விழுந்ததில் அவர்கள் இருவரும் பள்ளத்திற்குள் விழுந்தனர் அவர்கள் மீது மண் குவிந்த நிலையில் பள்ளத்திற்கு கம்பி கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அதனைப் பார்த்து கூச்சலிட்னர். பின்பாக இருவரும் நீண்ட நேரமாக வரமுடியாத நிலையில் மூச்சு திணறி உயிரிழந்து விட்டனர் என்றார்
இதையும் படிங்க: புறாவுக்காக கொலையா?... நண்பனை கட்டையால் அடித்துக் கொன்ற போதை இளைஞர்கள் கைது...!