புறாவுக்காக கொலையா?... நண்பனை கட்டையால் அடித்துக் கொன்ற போதை இளைஞர்கள் கைது...!
புறா திருடிய விவகாரம் நண்பனை அடித்துக் கொன்றுவிட்டு மதுபோதையில் காவல் நிலையத்தில் சரணடைந்த 3 பேர்
மதுரை அலங்காநல்லூர் அருகே புறா மற்றும் செல்போன் திருட்டுத் தகராறில், ஆட்டோ ஓட்டுநரான நண்பனைக் கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு, உடலை எங்கு வீசினோம் என்று தெரியாமல் தேடி அலைந்த 3 வாலிபர்கள், இறுதியில் மதுபோதையில் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி (30). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டி (29) என்பவருக்கும் இடையே நீண்ட நாள் நட்பு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி ஒன்றாகச் சேர்ந்து மது அருந்துவதும், ஊர் சுற்றுவதும் வழக்கம் எனக் கூறப்படுகிறது.
சுந்தரபாண்டி தனது வீட்டில் ஆசையாகப் புறாக்களை வளர்த்து வந்துள்ளார். சமீபகாலமாக அவரது வீட்டில் இருந்த புறாக்களும், அவரது செல்போனும் காணாமல் போயுள்ளன. தீவிரமாக விசாரித்ததில், தனது நெருங்கிய நண்பனான பசுபதிதான் அவற்றை வாரிச் சுருட்டித் திருடி விற்றார் என்பது சுந்தரபாண்டிக்குத் தெரியவந்தது.
இதையும் படிங்க: “பொதுநல மனு என்ற பெயரில்...” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு....!!
உயிராகப் பழகிய நண்பனே தனக்குத் துரோகம் செய்துவிட்டானே என்ற ஆத்திரத்தில், பசுபதியைப் பழிவாங்க சுந்தரபாண்டி திட்டமிட்டார். திட்டமிட்டபடி, கடந்த 19-05-2026 அன்று இரவு, சுந்தரபாண்டி தனது நண்பர்களான சீனிவாசன் (24), அசாருதீன் (19) ஆகியோருடன் இணைந்து, பசுபதியை அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யனார் கோவில் பகுதிக்கு மது அருந்த அழைத்துள்ளார்.
நான்கு பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது, புறா திருட்டுத் தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் வெடித்தது. ஆத்திரமடைந்த சுந்தரபாண்டி மற்றும் அவரது நண்பர்கள், மறைத்து வைத்திருந்த கட்டை மற்றும் ஆயுதங்களால் பசுபதியைத் தலைகடாடக் கொடூரமாகத் தாக்கினர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் பசுபதி அங்கேயே மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த மூவரும், தங்கள் இருசக்கர வாகனத்தில் இருந்த முதலுதவிப் பொருட்களைக் கொண்டு பசுபதியைக் காப்பாற்ற முயன்றனர்.
ஆனால், அதற்குள் பசுபதி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பதற்றமடைந்த அவர்கள், கொலையை மறைப்பதற்காகப் பசுபதியின் உடலை மெய்யப்பன்பட்டி அருகே சாலையோரப் புதரில் வீசிவிட்டுத் தப்பியோடினர். மறுநாள் காலையில் போதை தெளிந்த பிறகு, உடலை வீசிய இடம் தெரியாமல் கொலையாளிகள் மூவரும் திகைத்தனர்.
காவல்துறையிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக, பசுபதியின் உடல் எங்கு இருக்கிறது என்று பல்வேறு இடங்களில் அவர்களே தேடி அலைந்துள்ளனர். உடல் கிடைக்காத விரக்தியில், மூவரும் மீண்டும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, "காவல்துறை எப்படியும் நமது செல்போன் சிக்னல்களைக் கொண்டு நம்மைக் கண்டுபிடித்துக் கைது செய்துவிடும்" என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டு பயந்துள்ளனர்
இந்த விவாதத்தின் முடிவில், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்து, நேராக அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்குச் சென்றனர். காவல் நிலையத்திற்குள் நுழைந்த மூவரும், கடுமையான மதுபோதையில், "நாங்கள் தான் எங்கள் நண்பனைத் கட்டையால் அடித்துக் கொன்றுவிட்டு உடலை வீசிவிட்டோம்" என்று உளறிக் கொட்டியுள்ளனர். இதைக் கேட்டு அங்கிருந்த காவலர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
உடனடியாகச் செயல்பட்ட அலங்காநல்லூர் போலீசார் சீனிவாசன், சுந்தரபாண்டி, அசாருதீன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், சாலையோரத்தில் கிடந்த பசுபதியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலைச் சம்பவம் குறித்துப் அலங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சின்னஞ்சிறு புறா திருட்டுப் பிரச்சினையில், நண்பனைச் சக நண்பர்களே அடித்துக் கொன்ற இச்சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: மதுரையில் ஸ்ட்ராங் ரூமில் செயலிழந்த சிசிடிவி..! பதறிய வேட்பாளர்கள்..!!