அதிவேகமாக வந்த தவெக நிர்வாகி கார்... பைக்கில் திருமண பத்திரிக்கை வைக்கச் சென்ற மணமகன், தாய், தந்தையுடன் பலி...!
பகண்டைக் கூட்டுச்சாலை அருகே தவெக நிர்வாகியின் கார் மோதி திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுப்பதற்கு சென்ற மணமகன் மற்றும் அவரது பெற்றோர்கள் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகண்டை கூட்டுச்சாலை பகுதியில் நேற்று மாலை திருக்கோவிலூரில் இருந்து சங்கராபுரம் மார்க்கமாக சென்ற தமிழக வெற்றி கழகத்தின் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பொருளாளர் சுந்தரமூர்த்தி என்பவர் ஓட்டிச் சென்ற காரும்; சங்கராபுரத்திலிருந்து திருக்கோவிலூர் மார்க்கமாக வந்த மாடாம்பூண்டி பகுதியை சேர்ந்த நாராயணன் 22 என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த, நாராயணன் மற்றும் அவரது தந்தை ஆறுமுகம் 44 தாய் செல்லியம்மாள் 40 ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த மூவரையும் மீட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியோடு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நாராயணனின் தாய் செல்லியம்மாள் மற்றும் தந்தை ஆறுமுகம் ஆகியோர் உயிரிழந்துவிட, பலத்த காயமடைந்த நாராயணன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: #BREAKING ராங்கா போன ராம்ப் வாங்க்... தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு...!
இந்நிலையில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நாராயணனும் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த பகண்டை கூட்டுச்சாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் பயணித்து விபத்தில் உயிரிழந்த நாராயணனுக்கு வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி திருமணம் என்பதால் தனது தாய் தந்தையோடு அழைப்பிதழ் வழங்கிவிட்டு வரும்பொழுது இந்த கொடூர விபத்து நடைபெற்றது என்பதும், அதில் மூவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பதும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு... திமுகவுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுக்கப்போகும் விஜய்... அதிரும் அறிவாலயம்...!