மலிவு விலையில் சுகாதாரமான உணவு... முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு தெற்கு ரயில்வேயின் ட்ரீட்...!
முன்பதிவு செய்யாத பயணிகளுக்கான மலிவு விலை மற்றும் சுகாதாரமான உணவுகள் விற்பனையகத்தை தெற்கு இரயில்வே, சென்னை கோட்டம் அமைத்துள்ளது.
தெற்கு இரயில்வேயின் சென்னை கோட்டம், இந்திய இரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்துடன் (IRCTC) இணைந்து, முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு சுகாதாரமான மற்றும் மலிவு விலை உணவுகளை வழங்கி வருகிறது. 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சிக்கன உணவு திட்டத்தின் நோக்கம், பயணிகளுக்கு சத்தான மற்றும் குறைந்த விலை உணவுகளை வழங்குவதாகும்.
இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்ட போதிலும், இந்த வசதியான சேவை குறித்து பல பயணிகள் இன்னும் அறியாமல் உள்ளனர். முன்பதிவு செய்யாத பயணிகளின் பயணத்தை எளிதாகவும் வசதியாகவும் மாற்றுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இதன் மூலம் அவர்கள் நடைமேடையை விட்டு வெளியே செல்லாமல் உணவைப் பெற முடியும். சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் காட்பாடி ஆகிய இடங்களில் உள்ள ஐந்து சிற்றுண்டி அறைகளில் விற்பனை மையங்களை இயக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்கள் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு நேரடியாக நடைமேடைகளிலேயே உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 27 ரயில் நிலையங்களில் உள்ள கடைகள், தினசரி பயணிகள் மற்றும் தொலைதூரப் பயணிகள் சுகாதாரமான, மலிவு விலை மற்றும் தரமான உணவை எளிதாகப் பெறுவதை உறுதி செய்கின்றன.
இதையும் படிங்க: வாலிபர் வயிற்றில் 29 கரண்டிகள், 19 டூத் ப்ரஷ்கள்! ஆபரேஷன் தியேட்டரில் டாக்டர்கள் அதிர்ச்சி!
இந்த உணவுகளில் எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், பருப்பு கிச்சடி மற்றும் பூரி-கிழங்கு போன்ற அரிசி வகை உணவுகள் அடங்கும். இவை மரக் கரண்டிகளுடன் சுகாதாரமான அலுமினியப் படல கொள்கலன்களில் வழங்கப்படுகின்றன. வெறும் 20 ரூபாய் விலையில் விற்கப்படும் இந்த உணவுகள், பயணிகளுக்கு சத்தான மற்றும் செலவு குறைந்த உணவாக அமைகின்றன.
இந்த முயற்சி மூலம், முன்பதிவு செய்யாத அனைத்து பயணிகளும் இந்த சிக்கன உணவு விற்பனை மையங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சென்னை கோட்டம் அறிவுறுத்துகிறது.
இதையும் படிங்க: 19 வயதில் ரூ.1,330 கோடி சொத்து! கிரிப்டோகரன்சியில் கெத்து காட்டும் ட்ரம்ப் மகன்!