“செல்லாது... செல்லாது...” - எஸ்.பி.வேலுமணி தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்... நீதிபதிகள் கடும் எச்சரிக்கை...!
எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது கோவை மாநகராட்சியில் இளநிலை உதவியாளர் பணி நியமனத்தில் முறைகேடு
எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது கோவை மாநகராட்சியில் இளநிலை உதவியாளர் பணி நியமனத்தில் முறைகேடு - 54 பேரின் நியமனம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கோயம்புத்தூர் மாநகராட்சியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற இளநிலை உதவியாளர் பணிக்கான தேர்வு மற்றும் நியமனங்களில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகளும், முறையற்ற சாதகங்களும் நடந்துள்ளதாகக் கூறி, 54 பேரின் பணி நியமனங்களை செல்லாது என அறிவித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதிமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் 2020 ல், 69 இளநிலை உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காகத் தகுதியான நபர்களைப் பரிந்துரை செய்யுமாறு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு கடிதம் எழுதியதாக தெரிகிறது.
இதற்காக மொத்தம் 654 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதையும் படிங்க: திருச்சியில் கரைந்த அதிமுக கூடாரம்... தவெகவுக்கு தாவிய முக்கிய புள்ளிகள்... பட்டியலை பார்த்தாலே தலை சுத்துதே...!!
சான்றிதழ் சரிபார்ப்புக்காக ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டன. 2021 பிப்.8 தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, அதில் 440 விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்டனர்.
ஆனால், அதிர்ச்சியூட்டும் விதமாக, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த அதே நாளில் தகுதியானவர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டு, 54 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன. அதற்கு அடுத்த நாளான பிப்.9 ல் அவர்கள் அனைவருக்கும் பணி ஒதுக்கீட்டு ஆணைகளும் வழங்கப்பட்டு, அவர்கள் பணியில் சேர்ந்தனர். இவர்கள் அனைவரும் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்கள் என குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து மாநகராட்சியில் 'துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வரும் ஈஸ்வரி என்ற பெண்மணி, இந்த நியமனத்தில் எந்தவிதமான முறையான வழிமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்பதைக் கண்டறிந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். முன்னதாக தனி நீதிபதி இந்த வழக்கை தள்ளுபடி செய்தபோது, மனுதாரர் இந்தத் தேர்வில் பங்கேற்கவில்லை என்பதால், அவருக்கு இந்த நியமனங்களை எதிர்க்கும் தகுதி இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம் மற்றும் என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
விசாரணையில் மாநகராட்சி விதிகளின்படி இரண்டு பங்குகள் நேரடி நியமனம் மூலமும், ஒரு பங்கு மாநகராட்சியின் நான்காம் நிலை ஊழியர்களுக்கான பதவி உயர்வு மூலமும் நிரப்பப்பட வேண்டும். துப்புரவுப் பணியாளராக இருக்கும் மனுதாரருக்கு பதவி உயர்வு பெற தகுதியும் உரிமையும் உள்ளதால், இந்தத் தேர்வில் நடந்த முறைகேட்டை எதிர்க்க அவருக்கு முழு தகுதி உள்ளது என நீதிபதிகள் உறுதிபடத் தெரிவித்தனர்.
மேலும் மாநகராட்சி நிர்வாகம் மக்கள் குரல் நாளிதழில் விளம்பரம் கொடுத்ததாகக் கூறியது. ஆனால், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட அசல் நாளிதழில் அப்படியொரு விளம்பரமே இல்லை என்பது மனுதாரர் தரப்பில் நிரூபிக்கப்பட்டது. மாநகராட்சி தாக்கல் செய்த இ-பேப்பரில் மட்டுமே அது இருந்தது. இதன் மூலம், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தெரியும் வகையில் விளம்பரத்தில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது அம்பலமானது.
440 நபர்களின் சான்றிதழ்களைச் சரிபார்த்து, அன்றே மதிப்பெண் வழங்கி, அன்றே தகுதியானவர்களைத் தேர்வு செய்து, ஆணையரின் ஒப்புதல் பெற்று, பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. கணினி வேகத்தில் ஒரே நாளில் ஒட்டுமொத்த தேர்வு முறையையும் முடித்திருப்பது, இந்த நியமனங்கள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என நீதிமன்றம் சாடியது.
கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டப்படி, மூன்றாம் மற்றும் நான்காம் நிலை ஊழியர்களின் நியமனங்களை மேயர், மாநகராட்சி ஆணையர் மற்றும் கவுன்சிலால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் ஆகியோரைக் கொண்ட 'நியமனக் குழு தான் மேற்கொள்ள வேண்டும். ஆனால், இந்த நியமனத்தில் அத்தகைய சட்டப்பூர்வ குழு எதுவும் பயன்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தின் இந்தச் செயல் தகுதியானப் பொதுமக்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பறிக்கும் நெறியற்ற செயல் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், 2021-இல் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களின் பணி நியமன ஆணைகளையும் ரத்து செய்து, ஒட்டுமொத்த தேர்வு செயல்முறையையும் 'செல்லாது என அறிவித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும், உரிய விதிகளைப் பின்பற்றி, வெளிப்படையான முறையில் புதிய தேர்வு செயல்முறைகளைத் தொடங்கவும் மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பு, அரசு மற்றும் மாநகராட்சி பணிகளில் முறைகேடாக நுழைய நினைப்பவர்களுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: தவெகவில் இணைந்த விஜயபாஸ்கர்கள்...! அரங்கத்தை அதிரவைத்த தொண்டர்கள்..!! உற்சாக வரவேற்பு..!