சட்டசபையில் முதலமைச்சர் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றம்.. சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு!
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்து முன் மொழிந்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த அரசினர் தனித் தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் இதனை அறிவித்தார். தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராகவும், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
கடந்த சனிக்கிழமை முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. அதன்படி இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
தீர்மானத்தை முன்மொழியும்போது முதலமைச்சர் விஜய் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். “இது என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கை உள்ளிட்ட குடும்பப் பெண்களுக்காக இதயத்திலிருந்து பேசும் தீர்மானம். அவர்கள்தான் இன்று நான் இந்தப் பொறுப்பில் இருப்பதற்கு மிகப்பெரிய காரணம். நன்றி மற்றும் விசுவாசத்துடன் பேசுகிறேன்” என்றார்.
இதையும் படிங்க: அமைச்சரவையில் மரிய வில்சனுக்கு இடமா? பரபரப்பை கிளப்பிய சவுக்கு சங்கர்..!!
மேலும் அவர் கூறியதாவது: “பெண்கள் சமூகத்தில் உயர்ந்தால்தான் குடும்பத்துக்கும் நாட்டுக்கும் பெருமை. சங்க காலம் முதல் தமிழ்நாட்டில் பெண் ஆளுமைகள் பலர் இருந்துள்ளனர். 33 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு அவர்களுக்கான சலுகை அல்ல; ஜனநாயக உரிமை. ஒரு பெண் அதிகாரம் பெறும்போது குடும்பம் உயருகிறது; ஆயிரக்கணக்கான பெண்கள் உயரும்போது நாடே உயருகிறது. தொகுதி மறுசீரமைப்புடன் இணைத்து ஒத்திவைக்காமல், உடனடியாக அமல்படுத்த ஒன்றிய அரசு அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன. பின்னர் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் நிறைவேறியது.
இந்தத் தீர்மானம், மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேறிய பின்னரும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்குப் பிறகுதான் அமல்படுத்தப்படும் என்ற நிலையை எதிர்த்து தமிழ்நாடு எடுக்கும் முக்கிய அரசியல் நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது. தென் மாநிலங்கள் தங்களது மக்கள் தொகை கட்டுப்பாட்டு முயற்சிகளால் பாதிக்கப்படக் கூடாது என்ற கோரிக்கையும் இதில் அடங்கியுள்ளது.
இதையும் படிங்க: திங்கள் முதல் எம்.எல்.ஏ-க்களுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே! சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி உத்தரவு!