×
 

கலைஞர் கருணாநிதிதான் ரோல்மாடல்! தேவை கருணை அல்ல! உரிமை!! முதல்வர் ஸ்டாலின் பளீர் பேச்சு!

திமுக ஆட்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு, சம உரிமை உறுதி செய்யப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை: உலக மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி டிசம்பர் 3 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மாபெரும் கொண்டாட்டமும் விழிப்புணர்வு நிகழ்வும் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அரங்கம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகள், அவர்களது குடும்பத்தினர் என கூடியிருந்தனர். முதல்வரின் ஒவ்வொரு வார்த்தையும் கைதட்டலால் ஆரவாரமானது.

“திமுக ஆட்சிக்கு வந்ததும் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பும் சம உரிமையும் உறுதி செய்தோம். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி ஒதுக்கீடு வழங்கினோம். இது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதல் முறையாக நடந்திருக்கிறது. இது வெறும் அறிவிப்பு இல்லை; உரிமை!” என்று பெருமிதத்துடன் தொடங்கினார் ஸ்டாலின்.

“மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை கருணை இல்லை… உரிமைதான்! இன்றைய நாள் வெறும் கொண்டாட்ட நாள் இல்லை. அவர்களுக்கு சம உரிமையையும் சம வாய்ப்பையும் வழங்கியதை நினைவுகூரும் நாள். இந்த உலகத்தில் எல்லோரும் சமம் என்பதை நிரூபிக்கும் நாள்” என்று உருக்கமாகப் பேசினார்.

இதையும் படிங்க: உண்மையான கூட்டாட்சியை நிலை நிறுத்துவோம்… அரசியலமைப்பு தினத்தில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை …!

கலைஞரை ரோல் மாடலாக முன்னிறுத்தி முதல்வர் தொடர்ந்தார்:
“என் தந்தை கலைஞர் கருணாநிதிக்கு 2009-ல் ஒரு கண்ணில் பார்வை முற்றிலும் பறிபோய்விட்டது. முதுமையில் சக்கர நாற்காலியில்தான் வலம் வந்தார். ஆனால் அவர் ஒருநாள் கூட ‘முடியாது’ என்று சொன்னதில்லை. பம்பரம்போல சுற்றி சுற்றி மக்களுக்காக உழைத்தார். அந்த வில் பவர் (Will Power) தான் எல்லோருக்கும் தேவை. மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகள் கலைஞரை ரோல் மாடலாகக் கொண்டு முன்னேற வேண்டும். நீங்கள் முடியும் என்பதை உலகுக்குக் காட்ட வேண்டும்!” என்று உணர்ச்சிப் பெருக்குடன் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் திமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட ஸ்டாலின்,

  • மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது
  • அரசு வேலைவாய்ப்புகளில் பின்னடைவை நீக்கியது
  • ரூ.1,500 மாதாந்திர உதவித்தொகை
  • இலவச பயண வசதி, உபகரணங்கள், கல்வி உதவித்தொகை என பல திட்டங்களைச் செயல்படுத்தியிருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பல மாற்றுத்திறனாளி கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். முதல்வர் அவர்களை நேரில் பாராட்டி, பரிசளித்து கௌரவப்படுத்தினார்.“இந்த அரசு உங்களுக்காக எப்போதும் இருக்கிறது. உங்கள் குரலை நாங்கள் கேட்கிறோம். உங்கள் கனவுகளை நாங்கள் நிஜமாக்குவோம்” என்று உறுதியளித்து முதல்வர் உரையை நிறைவு செய்தார்.

இதையும் படிங்க: விவசாயிகளின் பாதுகாவலர் முதல்வர் ஸ்டாலின்... ஆனால் இந்த EPS..! ஏ.கே.எஸ். விஜயன் கடும் குற்றச்சாட்டு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share