ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறார் ஸ்டாலின்! கோவையில் வானதி சீனிவாசன் ஆவேசம்!
மத்திய அரசின் நலத்திட்டங்களுக்குத் தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவதாகவும், டாஸ்மாக் மூலம் ஏழை மக்களின் பணத்தைப் பறிப்பதே இந்த அரசின் இலக்காக உள்ளதாகவும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையின் வடவள்ளி பகுதியில் இன்று நடைபெற்ற ‘மோடி முகாம்’ நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் மேடையில் உரையாற்றிய அவர், திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, விஸ்வகர்மா திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் (மருத்துவக் காப்பீடு) போன்ற நூற்றுக்கணக்கானத் திட்டங்களை ஏழை மக்களுக்காக வழங்கி வருகிறது. ஆனால், இந்தத் திட்டங்கள் மக்களைச் சென்றடையவிடாமல் தமிழக அரசு முட்டுக்கட்டைப் போடுகிறது. அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனில் ஸ்டாலின் அரசுக்குச் சிறுதும் அக்கறை இல்லை.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல ஏழை எளிய மக்களுக்கானத் திட்டங்களை இந்த அரசு முடக்கியுள்ளது. இலவசப் பேருந்து பயணம் என்று விளம்பரம் செய்கிறார்கள், ஆனால் அது முழுமையாகச் செயல்படவில்லை; மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஒரு கையில் நிதியுதவி கொடுப்பது போலக் காட்டிவிட்டு, மறுபுறம் டாஸ்மாக் மூலம் ஏழை மக்களின் பணத்தைப் பறிக்கிறார்கள். இது ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயல்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. 7 வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை யாருக்கும் இங்குப் பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு எதிரானக் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமையிலானத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். இந்த அராஜக திமுக அரசை மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் என வானதி சீனிவாசன் உரையாற்றினார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் கனவு உலகத்தில் இருக்கிறார்! கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேட்டி!
இந்த முகாமில் கோவை மக்கள் சேவை மையம் சார்பில் பெண்களுக்குத் தையல் இயந்திரங்களை பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும், பெருந்திரளானப் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கோவை வடக்கு தொகுதியில் போட்டியா..?? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வானதி சீனிவாசன்..!!