திமுக போல வெற்றி பெற அறிவு வேணும்! உழைக்கணும்! பகல் கனவு காணக்கூடாது! விஜயை சீண்டும் ஸ்டாலின்!!
''தி.மு.க.,வைப் போல கட்சி நடத்தவும், வெற்றி பெறவும் அறிவு வேண்டும்; தி.மு.க.,வைப் போல உழைக்க வேண்டும். சில அறிவிலிகள், தி.மு.க.,வைப் போல வெற்றி பெற்று, முதல்வர் பதவியில் அமரலாம் என பகல் கனவு காண்கின்றனர்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க. இளைஞரணி சார்பில் 'தி.மு.க. 75 - அறிவுத் திருவிழா' என்ற தலைப்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று முற்போக்கு புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இதில் 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க. 75' என்ற நூலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசிய போது, தமிழ் வெற்றிக் கழகத் தலைவர் விஜயை மறைமுகமாகக் கடுமையாக விமர்சித்தார். "தி.மு.க.வைப் போல கட்சி நடத்தவும், வெற்றி பெறவும் அறிவு வேண்டும்; தி.மு.க.வைப் போல உழைக்க வேண்டும். சில அறிவிலிகள், தி.மு.க.வைப் போல வெற்றி பெற்று, முதல்வர் பதவியில் அமரலாம் என பகல் கனவு காண்கின்றனர்" என்று கூறினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் மேலும் பேசுகையில், "ஏதோ ஒரு கட்சியைத் துவக்கினோம்; அடுத்த முதல்வர் நான் தான் என அறிவித்து, நாம் ஆட்சிக்கு வரவில்லை. எத்தனை போராட்டங்கள், எத்தனை சிறைவாசங்கள், எத்தனை தியாகங்கள், எத்தனை துரோகங்களை நாம் சந்தித்துள்ளோம்.
இதையும் படிங்க: ஒருத்தர் கூட மிஸ் ஆகக்கூடாது! SIR விவகாரம்! திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!
தி.மு.க. உழைத்த உழைப்பு, சாதாரண உழைப்பல்ல. தி.மு.க. வரலாறு பற்றி தெரியாத சிலர், நம்மை மிரட்டிப் பார்க்கின்றனர். இன்னும் சில அறிவிலிகள், தி.மு.க.வைப் போலவே வெற்றி பெறுவோம் என பகல் கனவு காண்கின்றனர். தி.மு.க.வைப் போல வெற்றி பெற, தி.மு.க.வைப் போல உழைப்பும், அறிவும் தேவை" என்று வலியுறுத்தினார்.
"ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு தி.மு.க. தான். இனி இப்படியொரு கட்சி, இந்த மண்ணில் தோன்ற முடியாது. தி.மு.க. வரலாறு முழுதுமே போராட்ட வரலாறு தான். அதை நினைவூட்டவே, இந்த அறிவுத் திருவிழா" என்று அவர் தெரிவித்தார். மேலும், "கருப்பு, சிவப்பு, நீலம் சேர்ந்து இருக்கும் போது, எந்தக் காவியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது. ராகுல், தேஜஸ்வி என அகில இந்திய தலைவர்களும், தி.மு.க.வைப் பாராட்டுகின்றனர்" என்று கூறினார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) குறித்து பேசிய முதலமைச்சர், "கொள்கை ரீதியாக தி.மு.க.வை வீழ்த்த முடியாததால், தேர்தல் கமிஷன் வாயிலாக குறுக்கு வழியில் வீழ்த்த முடியுமா என முயற்சிக்கின்றனர். அது தான், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம். தேர்தல் நெருக்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என, அனைத்து கட்சிகளும் சொல்லியும், ஏன் அவசரமாக நடத்த வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.
"எதையும் காது கொடுத்து கேட்காமல், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் கமிஷன் துவக்கி விட்டது. சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். தேர்தல் களத்தில் வேலை செய்யும் போது, எந்த ஒரு போலி வாக்காளரும் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உண்மையான வாக்காளர்கள் விடுபடாமல் பார்க்க வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தி.மு.க.வின் 75 ஆண்டு வரலாற்றைப் போற்றும் வகையில் அமைந்த இந்த அறிவுத் திருவிழா, கட்சியினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது. முதலமைச்சரின் விஜய் மீதான விமர்சனம், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருச்சி, புதுக்கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு!! துவங்கி வைக்கும் அசத்தல் திட்டங்கள்! பறந்த அதிரடி உத்தரவு!