×
 

சூடுபிடிக்கும் அஜித்குமார் வழக்கு.. டிஜிபிக்கு பறந்த நோட்டீஸ்.. மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி..!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கில் டிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் ஜூன் 27ம் தேதி கோயிலுக்கு வந்த பக்தர் சிவகாமி என்பவரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் தங்க நகை மற்றும் 2500 ரூபாய் ரொக்கம் காணாமல் போனதாக புகார் அளித்தார். அதன்பேரில் அஜித்குமார் என்ற இளைஞரை மானாமதுரை உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். 

தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த விவகாரத்தில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட எஸ்பியாக இருந்த ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: இனி போலிசில் இது வேண்டவே வேண்டாம்! அஜித்குமார் மரணம் எதிரொலி.. ஆக்‌ஷனில் இறங்கிய டிஜிபி..!

விஷயம் பூதாகரமானதால் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று முன்தினம் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

இதனை தொடர்ந்து அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இதற்கிடையே அஜித்குமாரை, சாதாரண உடையில் வந்த தனிப்படை போலீசார் அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தனிப்படை போலீசார் 2 நாட்களாக அஜித்குமாரை பல்வேறு இடங்களில் வைத்து தாக்கியதாகவும், தனிப்படையினருக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது என்றும் ஐகோர்ட் மதுரை கேள்வி எழுப்பி இருந்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் காவல்துறையில் உள்ள அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் மட்டும் இன்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. நாளிதழ் செய்தி அடிப்படையில் விசாரணையை எடுத்த மனித உரிமை ஆணையம், தமிழக டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அஜீத்குமார் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம்... பொறுப்பேற்றார் சிவகங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share