இனி போலிசில் இது வேண்டவே வேண்டாம்! அஜித்குமார் மரணம் எதிரொலி.. ஆக்ஷனில் இறங்கிய டிஜிபி..!
தமிழகத்தில் அதிகாரிகளுக்குக் கீழ் இயங்கும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை உடனடியாக கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிவகங்கை திருப்புவனத்தில் நகை காணாமல் போன விவகாரத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் இருந்தபோது மரணம் அடைந்தது தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட எஸ்பியாக இருந்த ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விஷயம் பூதாகரமானதால் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று நேரில் ஆறுதல் கூறினார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் பெரியகருப்பன் மொபைல் போனில் தொடர்புகொண்ட முதல்வர் ஸ்டாலின், அஜித்குமாரின் தாய் மாலதிக்கு ஆறுதல் சொன்னார். ரொம்ப சாரிம்மா; தைரியமா இருங்க. எனக்கு ரொம்ப வருத்தம் தான் என்றார். அஜித்குமாரின் சகோதரர் நவீனிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், நடக்கக்கூடாதது நடந்து விட்டது. தைரியமாக இருங்கள் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: இனி இதுபோல நடக்காதுன்னு உத்தரவாதம் கொடுங்க முதல்வரே.. கொந்தளித்த தவெக விஜய்..!
இதனை தொடர்ந்து இன்று அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இதற்கிடையே அஜித்குமாரை, சாதாரண உடையில் வந்த தனிப்படை போலீசார் அழைத்துசென்று விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தனிப்படை போலீசார் 2 நாட்களாக அஜித்குமாரை பல்வேறு இடங்களில் வைத்து தாக்கியதாகவும், தனிப்படையினருக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது என்றும் ஐகோர்ட் மதுரை கேள்வி எழுப்பி இருந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுதும் காவல்துறையில் உள்ள அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மாவட்டங்களில் எஸ்பி, டிஎஸ்பி வசம் தனிப்படைகள் இருப்பது வழக்கம். அவர்கள் பல்வேறு வகையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்வர்.
இந்த தனிப்படைகளில் செயல்படும் போலீசார், பெரிய அளவிலான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யும்போது அவர்களுக்கு அதற்கான பாராட்டுகளும் கிடைக்கும். இதனால் ஒரு காலத்தில் தனிப்படைகளில் சேர போலீசார் பலர் ஆர்வம் காட்டினர். ஆனால் சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு பலர் தயக்கம் காட்ட தொடங்கினர்.
இப்போது இளைஞர் அஜித்குமார் போலீஸ் விசாரணையில் இறந்த சம்பவம் பூதாகரமாக கிளம்பி உள்ளதால் தனிப்படையில் உள்ள போலீசார் தாங்களாகவே முன்வந்து காவல் நிலைய பணிகளுக்கு விருப்ப மாறுதல் கேட்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் எஸ்பி, டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் கீழ் செயல்படும் அங்கீகரிக்கப்படாத சிறப்பு படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருக்கிறார்.
குற்ற சம்பவங்கள் நடக்கும்போது வழக்கின் தன்மைக்கு ஏற்ப தனிப்படைகள் அமைத்து விசாரிக்க வேண்டும். தனிப்படைகளை வைத்துக்கொண்டு விசாரணை நடத்தக் கூடாது என ஐ.ஜிக்கள் மூலம் வாய்மொழி உத்தரவாக இந்த அறிவிப்பு கொடுத்திருப்பதாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க: வேடிக்கை பாக்குறது மட்டும்தான் வேலையா? முதல்வர் ஸ்டாலினை விளாசிய நாயினார்..? அடுக்கும் கேள்விகள்..!