×
 

தாயகம் திரும்பிய திருமங்கை ஆழ்வார் சிலை! இங்கிலாந்தில் இருந்து மீட்ட சிலையை முதல்வர் விஜய் பார்வையிட்டார்!

கும்பகோணம் திருக்கோயிலிலிருந்து களவாடப்பட்டு இங்கிலாந்திலிருந்து மீட்டு வரப்பட்ட பழமையான திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையை முதலமைச்சர் பார்வையிட்டார்.

கும்பகோணம் அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் இருந்து பல தசாப்தங்களுக்கு முன்பு களவாடப்பட்டு, இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அரிய திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலை வெற்றிகரமாக மீட்கப்பட்டு தமிழ்நாடு கொண்டுவரப்பட்ட நிலையில், அதனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமைச் செயலகத்தில் நேரில் பார்வையிட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் இருந்து கடந்த 1957 முதல் 1967 வரையிலான காலகட்டத்தில், பழமையான திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலை மற்றும் காளிங்கநர்த்தனர் கிருஷ்ணர், விஷ்ணு, ஸ்ரீதேவி ஆகிய 3 உலோகச் சிலைகள் என மொத்தம் 4 அரிய சிலைகள் மர்ம நபர்களால் களவாடப்பட்டதாகக் கடந்த 2020-ஆம் ஆண்டு திருக்கோயில் செயல் அலுவலரால் சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டது.

இப்புகாரின் பேரில் தீவிர புலன்விசாரணையில் இறங்கிய தமிழ்நாடு அரசின் சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு (Idol Wing), திருமங்கை ஆழ்வாரின் சிலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் (Ashmolean Museum) இருப்பதை துல்லியமாகக் கண்டறிந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகத்தில் காளிங்கநர்த்தனர் சிலையும், புளோரிடாவில் ஸ்ரீதேவி சிலையும், டெக்சாஸில் விஷ்ணு சிலையும் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: இங்கிலாந்து அரசியலில் மாற்றம்..!! புதிய பிரதமராக இன்று பதவியேற்கிறார் ஆண்டி பர்ன்ஹாம்..!!

இதையடுத்து, சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திரட்டிய அறிவியல் பூர்வமான, மறுக்க முடியாத வரலாற்று ஆவணங்கள் மற்றும் சான்றுகள் இங்கிலாந்து நாட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டன. இவற்றை முழுமையாக ஆய்வு செய்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கவுன்சில், சிலையைத் தாயகமான இந்தியாவிற்குத் திருப்பியளிக்க ஒப்புதல் வழங்கியது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு, இந்திய உள்துறை, வெளியுறவுத்துறை, கலாச்சார அமைச்சகம் மற்றும் இந்தியத் தொல்லியல் துறை (ASI) ஆகியவற்றின் கூட்டு தூதரக முயற்சிகளின் பயனாக, கடந்த ஆகஸ்ட் 16 அன்று இச்சிலை தமிழ்நாட்டிற்குப் பத்திரமாகக் கொண்டுவரப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மீட்கப்பட்ட இப் பழமையான சிலையை தமிழ்நாடு முதலமைச்சரிடம் காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., மற்றும் சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் திருமதி டி. கல்பனா நாயக், இ.கா.ப., ஆகியோர் காண்பித்தனர். சிலையினை மீட்டுக் கொண்டுவந்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.

அனைத்துச் சட்டப்பூர்வ நடைமுறைகளும் முறைப்படி நிறைவடைந்த பின்னர், இத்திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை கும்பகோணம் மூலக்கோயிலில் ஆகம விதிகளின்படி மீண்டும் பொதுமக்களின் வழிபாட்டிற்காக முறைப்படி நிறுவப்பட உள்ளது.

இதையும் படிங்க: ரூ.7 வரை உயர்கிறதா ஆவின் கொள்முதல் விலை? முதல்வர் விஜய்யின் அறிவிப்பை எதிர்நோக்கும் பால் உற்பத்தியாளர்கள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share