8 மணி நேரத்தில் உடற்கூறு ஆய்வா? EPS- க்கு பேரவையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலடி...!
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்கூறாய்வு விவகாரம் குறித்த இபிஎஸ் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.
சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார். எதிர்க்கட்சித் தலைவரை கேள்வி எழுப்ப விடாமல் முதல்வர் விளக்கம் அளித்தது ஏன் என்றும் முதலில் முதல்வருக்கு அனுமதி அளிக்கப்பட்டது ஏன் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பு இருந்தார். தொடர்ந்து கரூர் சம்பவம் குறித்து காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் உடல்களை அவசர அவசரமாக உடற்கூறாய்வு செய்தது ஏன் என்றும் 39 உடல்களையும் 8 மணி நேரத்தில் பிரேத பரிசோதனை செய்தது எப்படி என்றும் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்து பேசினார்.
1704 மருத்துவ பணியாளர்கள் பணியில் இருந்தனர் என்றும் மொத்தம் 14 மணி நேரம் பிரேத பரிசோதனை நடைபெற்றது எனவும் தெரிவித்தார். 3 முதல் 4 மணி நேரத்தில் பிரேத பரிசோதனை நடந்ததாக பரவும் தகவல் தவறானது என்றும் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதி பெற்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது என்று கூறிய மா. சுப்பிரமணியன், செப்டம்பர் 28ஆம் தேதி நள்ளிரவில் 1.45 மணிக்கு தொடங்கிய உடற்கூறாய்வு செப்டம்பர் 29 பிற்பகல் 4 மணிக்கு நிறைவடைந்ததாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊரில் கல்யாணமாம் மாரில் சந்தனமாம்… முதல்வர் பேசும் பேச்சா இது? பேரவையில் காரசார விவாதம்…!
சந்தேகத்திற்கு இடமின்றி கரூர் துயர சம்பவத்தில் பலியான 41 உடல்களின் உடற்கூறாய்வும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டதாகவும், எவ்வித ஒளிவு மறைவும் இன்றி உடற் கூராய்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: ஏழு மணி நேரம் கழித்து தான் விஜய் வந்தார்… கரூரில் என்ன நடந்தது? சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்…!