பள்ளிக்கரணை சதுப்பு நில வழக்கு கட்டுமான நிறுவனங்களின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை பெரும்பாக்கம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து, வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள சர்வதேச ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில், 1,250 வீடுகள் கொண்ட பிரம்மாண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. கட்டுமான நிறுவனங்களின் இந்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (ஜூலை 17, 2026) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் இயற்கை அமைப்பை முற்றிலும் அழிக்கும் வகையில், "பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் என்னும் நிறுவனத்திற்கு 1,250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்திற்கு கடந்த 2025 ஜனவரி மாதம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, சிஎம்டிஏ மற்றும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஆகியவை அனுமதி வழங்கியிருந்தன.
சதுப்பு நில அழிவுக்கு எதிராகச் சுற்றுச்சூழல் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தன. இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் அடிப்படையில், கடந்த 2025 அக்டோபர் மாதம் இக்கட்டுமானத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: "பள்ளிக்கரணை பேராபத்து...! சதுப்பு நிலக் கட்டிடம் கூடாது... வேல்முருகன் வலியுறுத்தல்..!!
அதன் தொடர்ச்சியாக, கடந்த மே 8-ஆம் தேதி நடைபெற்ற மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையக் கூட்டத்தில், தமிழ்நாடு ஈரநில ஆணையத்தின்" (Tamil Nadu Wetlands Authority) தடையில்லாச் சான்று பெறாமல் கட்டுமானத்தைத் துவங்கி நிபந்தனைகளை மீறியதால், பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது. மாநில அரசின் இந்த ரத்து உத்தரவை எதிர்த்து பிரிகேட் எண்டர்பிரைசஸ் லிமிட்டெட் மற்றும் மார்கன் ஏசியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்த மெகா திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி, எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றமும் இதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளன. சுற்றுச்சூழல் அனுமதி விவகாரத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால், அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய நிறுவனங்கள் தயாராக உள்ளன.
சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதற்கென்றே 'தேசிய பசுமை தீர்ப்பாயம்' (NGT) போன்ற தகுதியான சட்ட அமைப்புகள் உள்ளன. அதுதான் இதற்கான உரிய அமைப்பு. எனவே, விதிகளையெல்லாம் தாண்டி நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு, கட்டுமான நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டிருந்தால், சட்ட விதிகளின்படி நீங்கள் முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தையோ அல்லது தேசிய பசுமை தீர்ப்பாயத்தையோ தான் அணுகியிருக்க வேண்டும். அதை விடுத்து நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இருப்பினும், மனுதாரர்கள் தங்களது கோரிக்கைகளைச் சென்னை உயர் நீதிமன்றம் அல்லது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முன்வைக்கலாம் என்றும், அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அமைப்புகள் விரைவாக விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, கட்டுமான நிறுவனங்களின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கத் தொடரப்பட்ட சட்டப் போராட்டத்தில், உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விலங்கு பலி தடைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை! தமிழக அரசின் நடவடிக்கைக்கு எஸ்டிபிஐ வரவேற்பு!