தமிழ்நாடு அரசே... தமிழர்களை காப்பாற்று..!! வெளிநாட்டில் சிக்கியவர்களை மிக்க வேல்முருகன் வலியுறுத்தல்..!!
வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.
தாய்லாந்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களைக் காப்பாற்று! என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.வேலைவாய்ப்பை நம்பி தாய்லாந்து சென்ற திருவள்ளூர் மாவட்டம் சாலூர், மல்லாவரம் பகுதியைச் சேர்ந்த விஜய், வாலாஜா கோவிந்தசேரி குப்பம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ், வேலூர் மருதாளம் பகுதியைச் சேர்ந்த மதன் ஆகிய மூன்று தமிழர்கள், நகரப் பகுதிகளிலிருந்து சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.
தங்கள் பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள்? எந்த நிலையில் இருக்கிறார்கள்? நாளை என்ன ஆகுமோ? என்ற அச்சத்துடன் அவர்களது குடும்பங்கள் தவித்துக் கொண்டிருக்கின்றன.இந்தக் குடும்பத்தினர் கடந்த 19.08.2026 அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை அலுவலகத்தில் முறையிட்டதுடன், புலம்பெயர் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. தென்னரசு அவர்களையும் நேரில் சந்தித்து தங்களது கண்ணீர்க் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிப்பதை வரவேற்கிறோம். ஆனால், மூன்று தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், நிர்வாகத்தின் வழக்கமான வேகத்தில் இந்தப் பிரச்சினையை அணுகுவது போதாது. இது ஒரு சாதாரண புகார் அல்ல.
மூன்று குடும்பங்களின் நிம்மதி பறிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பெற்றோர்களின் கண்கள் வாசலில் காத்திருக்கின்றன. மூன்று தமிழர்களின் பாதுகாப்பு தொலைதூர நாட்டில் கேள்விக்குறியாகியுள்ளது.தமிழ்நாடு அரசு, ஒன்றிய வெளியுறவுத்துறை, தாய்லாந்தில் உள்ள இந்தியத் தூதரகம், தாய்லாந்து காவல்துறை ஆகியவற்றுடன் தொடர்ச்சியான நேரடி ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, மூவரின் இருப்பிடத்தை உறுதி செய்து, அவர்களை பாதுகாப்பாக மீட்கப்படுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அலைபேசி எண்கள் மற்றும் பிற தகவல்களை உடனடியாக ஆய்வு செய்து, அவர்கள் இருக்கும் இடத்தைத் துல்லியமாகக் கண்டறிவதற்கான அனைத்து தொழில்நுட்ப வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும். மேலும், அவர்கள் தாயகம் திரும்பும் வரையிலும் குடும்பத்தினருடன் அரசு அதிகாரிகள் தொடர்ச்சியான தொடர்பில் இருந்து, உண்மை நிலவரத்தை அவ்வப்போது உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: எல்நினோவால் அழியப் போறோமா.? சிறுமலை உடைப்பு... வலுக்கும் கண்டனங்கள்.!!
விஜய், யுவராஜ், மதன் ஆகிய மூவரையும் பாதுகாப்பாக மீட்டுத் தாயகம் அழைத்து வர வேண்டும்.வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நலனுக்காகத் தனித்துறையும், தனி ஆணையரகமும் செயல்படும் நிலையில், எங்கள் தமிழர் எங்கு சிக்கினாலும் அவர்களை மீட்போம் என்ற நம்பிக்கையை தமிழக அரசு நடைமுறையில் நிரூபிக்க வேண்டிய நேரம் இது. எனவே, அமைச்சர் திரு. தென்னரசு அவர்களும், தமிழ்நாடு அரசும் இந்த விவகாரத்தில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி, உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படுவதற்கு முன்பாகவே மூன்று தமிழர்களையும் பாதுகாப்பாக மீட்டெடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தலைநகரில் ஆயுத மோதல்..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா..? கொந்தளித்த வேல்முருகன்.!!